கர்நாடக மாஜி மந்திரி கைது : மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு : கற்பழிப்பு புகாரில் சிக்கிய கர்நாடக முன்னாள் அமைச்சர் ஹாலப்பா, ஷிமோகா எஸ்.பி., முன்னிலையில் நேற்று சரணடைந்தார்; இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.கர்நாடக உணவுத் துறை அமைச்சராக இருந்தவர் ஹாலப்பா.

சில மாதங்களுக்கு முன், ஷிமோகா மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்தபோது, தன் நண்பர் வெங்கடேச மூர்த்தி வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, தன் நண்பரின் மனைவி சந்திராவதியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, ஹாலப்பா மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஹாலப்பா, தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கை சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.

இந்நிலையில், ஹாலப்பா திடீரென தலைமறைவானார். தலைமறைவாக உள்ள ஹாலப்பாவை நேரில் ஆஜராகும்படி பெங்களூரு பசவேஸ்வர நகர் வீடு, கர்நாடக சட்டசபை எம்.எல்.ஏ., விடுதி, சொரபா, ஹர்த்தாலில் உள்ள வீட்டிற்கு சி.ஐ.டி., போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். இந்த நோட்டீஸ் பிரதிகள் ஹாலப்பா வீடுகளின் கதவுகளில் ஒட்டப்பட்டன.தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக முன்ஜாமீன் கோரி ஷிமோகா கோர்ட்டில் ஹாலப்பா தாக்கல் செய்திருந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது. சி.ஐ.டி., போலீசார் விதித்திருந்த கெடு இன்றுடன் முடிகிறது.இந்நிலையில், தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹாலப்பா, ஷிமோகாவிலுள்ள எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., முருகன் முன்னிலையில் நேற்று சரணடைந்தார்.அரசு மருத்துவமனையில் ஹாலப் பாவுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின், ஹாலப்பாவை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே, வெங்கடேசமூர்த்தி, சந்திராவதி தம்பதியினர் ஷிமோகா வினோபா நகரில் தங்கள் குடியிருந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு வீட்டிற்கு குடிசென்றனர். ஹாலப்பா மீதான விவகாரம் வெளியான நாளிலிருந்து தன்னையும், தன் மனைவி, பிள்ளைகளை போனில் மிரட்டுவதால் வேறு வீட்டிற்கு செல்வதாக வெங்கடேசமூர்த்தி தெரிவித்தார்.சம்பவம் நடந்த பிறகு ஹாலப்பாவின் உதவியாளர் கிரிஷ், வெங்கடேசமூர்த்தியிடம், ‘வழக்கு எதுவும் வேண்டாம்; சமாதானமாக செல்லலாம்; நடந்தவைகளை மறந்து விடலாம்’ என்று கூறியுள்ளார். வெங்கடேசமூர்த்தி ஒப்புக் கொள்ளாததால் கிரிஷ் மிரட்டியதாக கூறப்படுகிறது.இதை வெங்கடேசமூர்த்தி, மொபைல் போனில் பதிவு செய்து போலீசிடம் ஒப்படைத்துள்ளார். இது தொடர்பாக கிரிஷ், ஷிமோகா எஸ்.பி., முன் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மருத்துவமனையில் ஹாலப்பா அனுமதி : கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹாலப்பாவை சிறையில் அடைக்க நீதிபதி சீனிவாசா கவுடா உத்தரவிட்டார். சிறைக்கு சென்ற பின், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று ஹாலப்பா கூறியதால், ஷிமோகா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.