எல்லாருக்கும் மலிவு விலையில் ரேஷன் தந்தால் தாங்க முடியாது: நிலைமையை சுட்டிக்காட்டி பவார் வெளிப்படை

புதுடில்லி: ”பொது வினியோக திட்டத்தை பரவலாக்குவது என்பது நடக்காத காரியம். அனைத்து குடும்பங்களுக்கும் மலிவு விலையில் உணவு தானியங்களை வழங்குவதும் சாத்தியமில்லை. அப்படி வழங்கினால், தற்போதுள்ள 70 ஆயிரம் கோடி ரூபாய் உணவு மானியம் பல மடங்கு அதிகரிக்கும்.

அதை அரசால் தாங்க முடியாது,” என மத்திய உணவு அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார். உணவு அமைச்சகம் தொடர்பாக ராஜ்யசபாவில் நேற்று நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய மத்திய அமைச்சர் சரத் பவார் இதை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: பொது வினியோக திட்டத்தை பரவலாக்கினால் அரசு, ஏழு கோடி டன் உணவு தானியங்களை கொள்முதல் செய்ய நேரிடும். இதுவரை 5.4 கோடி டன் உணவு தானியம்தான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதுவே பெரிய சாதனையாக கருதப்படுகிறது. மேலும், ஆரம்பத்தில் 18 ஆயிரம் கோடி முதல் 19 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த உணவு மானியம் இப்போது, 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. வறுமைக்கோட்டிற்கு மேலே உள்ளவர்களுக்கு வழங்கப்படும் உணவு தானியங்களின் விலையை உயர்த்தக் கூடாது என, கோரிக்கை விடுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில், பொது வினியோக திட்டத்தை பரவலாக்கினால், மானியம் எங்கிருந்து கிடைக்கும்.

வறுமைக்கோட்டிற்கு மேலே உள்ளவர்கள் எல்லாம் 2002ம் ஆண்டு விலைக்கே, ரேஷன் பொருட்களை தற்போது பெறுகின்றனர். ஆனால், விவசாயிகளிடம் இருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்யும் போது வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையானது இரு மடங்கு அதிகரித்து விட்டது. ஆனால், ரேஷன் பொருட்கள் விலை உயர்த்தப்படவில்லை. மாநில அரசுக்கு பொறுப்பு: உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறினால், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு கிலோ மூன்று ரூபாய் விலையில் அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். இருந்தாலும், இந்த மசோதா நிறைவேற்றப்படும் முன், மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும். ஏனெனில், மாநில அரசுகளுக்கு இதில் நிறைய பொறுப்பு உள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்கள் எத்தனை என்பது குறித்து திட்டக் கமிஷனும் தெரிவிக்க வேண்டும்.

திட்டக் கமிஷன் தரும் தகவல்கள் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும். இந்த ஆரம்ப கட்ட வேலைகள் எல்லாம் முடிந்து விட்டால், மசோதா நிறைவேற்றப்படுவது எளிது. பொது வினியோக முறையில் முறைகேடுகள் நிகழ்வதைத் தடுக்க, வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு உணவு தானியங்களுக்குப் பதிலாக பணமாக வழங்கலாம் என, சில தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி விரிவான அளவில் விவாதிக்க வேண்டும். மேலும், பணம் வழங்கினால், அதைப் பெற்றுக் கொண்ட ஏழைகள், உணவு தானியங்களுக்குத்தான் அதை செலவிடுவர் என சொல்ல முடியாது. இந்தப் பிரச்னை பற்றியும் ஆலோசிக்க வேண்டும். ஸ்மார்ட் கார்டு மூலமாக உணவு தானியங்களை சப்ளை செய்யும் முன்னோடி திட்டம் சோதனை அடிப்படையில், இரண்டு மூன்று மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முறை வெற்றிகரமாக அமைந்தால், அதை நாடு முழுவதும் அமல்படுத்தத் தயார்.

நாட்டில் உணவு தானிய கையிருப்பு திருப்திகரமாக உள்ளது. மக்களுக்கு குறிப்பாக நலிந்த பிரிவினருக்கு ஒரு ஆண்டுக்கு உணவு தானியங்களை தடையின்றி வழங்க முடியும். அதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. இருந்தாலும், உணவு தானியங்களை சேமித்து வைப்பதற்கான வசதிகளை அதிகரிக்க வேண்டும். அதற்கு நிறைய நவீன சேமிப்பு கிடங்குகளை உருவாக்க வேண்டும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டையும் திட்டக் கமிஷன் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு சரத் பவார் கூறினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.