அம்பானி குடும்பத்திற்காக விதிகளை மீறி நள்ளிரவில் திருப்பதி கோவிலைத் திறந்ததால் சர்ச்சை

திருப்பதி: திருப்பதி வெங்கடாசலபதி கோவிலின் விதிமுறைகளைக் காற்றில் பறக்க விட்டு முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்காக மலைப் பாதை கேட்டைத் திறந்து விட்டதோடு, நள்ளிரவில் நடைபெறும் ஏகாந்த சேவையிலும் அவர்களை பங்கேற்க அனுமதித்து பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் திருப்பதி தேவஸ்தான தலைவர் ஆதிகேவசவலு.

முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, தாயார் கோகிலா பென். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் தங்கள் உறவினர்களுடன் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட மும்பையில் இருந்து விமானத்தில் புறப்பட்டனர். ரேனிகுண்டா விமான நிலையத்திற்கு வந்த அவர்கள் கார்களில் திருப்பதி கோவிலுக்கு புறப்பட்டனர்.

திருப்பதி மலை அடிவாரத்தை அவர்கள் அடைந்தபோது நள்ளிரவு 12.45 மணி ஆகிவிட்டது. அப்போது திருப்பதி மலைப்பாதை மூடப்பட்டிருந்தது.

உடனே கீழே இறங்கிய நீதா அம்பானி பாதுகாவலர்களிடம் சென்று கதவை திறக்குமாறு கேட்டார். அதற்கு அவர்கள் வழக்கமாக மலைப்பாதையை நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை மூடி விடுவோம். இதனால் 3 மணிக்கு பிறகே திறக்கப்படும் என்றனர்.

இதை கேட்டதும் ஆவேசம் அடைந்த நீதா திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஆதிகேசவலு நாயுடுவை செல்போனில் தொடர்பு கொண்டு, மலைப்பாதை கேட்டை திறந்து விடுமாறு கேட்டார். உடனே அவர், மலைப்பாதை பாதுகாவலர்களை தொடர்பு கொண்டு அம்பானி குடும்பத்தினருக்காக கேட்டை திறந்து விடுங்கள் என்று கூறினார்.

இதையடுத்து பாதுகாவலர்கள் கேட்டை திறந்தனர். பின்னர் அம்பானி குடும்பத்தினர் திருப்பதி கோவிலுக்கு சென்றனர்.

அவர்களை ஆதிகேசவலு நாயுடு வரவேற்று வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக கோவிலுக்குள் அழைத்து சென்றார். பின்னர் அவர்கள் விதியை மீறி ஏகாந்த சேவையில் பங்கேற்றனர். வழக்கமாக ஏகாந்த சேவையின் போது யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இதைத் தொடர்ந்து அவர்கள் காலை 3 மணிக்கு கோவிலில் நடந்த சுப்ரபாத சேவையிலும் பங்கேற்றனர். வழக்கமாக இச்சேவை 15 நிமிடத்திற்குள் முடிந்துவிடும். ஆனால் அம்பானி குடும்பத்தினருக்காக 3 மணி முதல் 4 மணி வரை இச்சேவை நடந்தது. இந்த சேவை நடந்தபோது பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் 12 மணி நேரம் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.

ஆதிகேசவலுவின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதை நியாயப்படுத்தியுள்ளார் கேசவலு. இதுகுறித்து அவர் கூறுகையில், அம்பானி குடும்பத்தினர் கோவிலுக்கு கோடி கோடியாக நன்கொடை தருகிறார்கள். அவர்கள் விடுதிகளும் கட்டித்தந்துள்ளனர். கோவிலுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருவதால்தான் மலைப்பாதை கேட்டை திறக்கச் சொன்னேன். இதில் தவறு ஏதும் இல்லை. இதை ஒரு சர்ச்சையாக மாற்றுவது நல்லதல்ல என்று கூறியுள்ளார்.

கடந்த வாரம்தான் திருமலை தலைமைப் பூசாரி ரமண தீக்சிதலு ஒரு சர்ச்சையில் சிக்கினார். கடந்த ஏப்ரல் 18ம் தேதி தனியார் விடுதியில் தங்கியிருந்த அம்பானி குடும்பத்தினரை அங்கு நேரில் போய் சந்தித்து பிரசாதங்களை வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அம்பானி குடும்பத்தினருக்காக கோவில் விதிமுறைகளை தூக்கிப் போட்டு மிதித்துள்ளார் ஆதிகேசவலு.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெல்ல வேண்டும் என்பதற்காக சிறப்பு தரிசனம் செய்யவே நீதா திருப்பதிக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.