சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2010 சாம்பியன்

posted in: தமிழ்நாடு | 0

நவி மும்பை: பல்வேறு சாதனைகளுடன் 3வது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

நவி மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இறுதிப் போட்டி ரசிகர்களுக்கு சரியான விருந்தாக அமைந்தது.

2வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருந்த்து சென்னை. மும்பைக்கு இது முதல் இறுதிப் போட்டியாகும்.

டாஸ் வென்ற டோணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களான ஹெய்டனும் விஜய்யும் பெரிய ஸ்கோரை நோக்கி அடித்து ஆட ஆரம்பித்தனர். ஹெய்டன் சற்று கட்டையைப் போட விஜய் வேகமாக ஆடினார். இந்தநிலையில் ஹெய்ட்ன் 17 ரன்களில் வீழ விஜய் 26 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.

நேற்றைய ஆட்டத்தின் சிறப்பம்சமே சுரேஷ் ரெய்னாதான். மும்பை பந்து வீச்சாளர்களைப் பதம் பார்த்த ரெய்னா 35 பந்துகளில் 57 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.

கேப்டன் டோணி 15 பந்துகளில் 22 ரன்களைக் குவித்தார். இறுதியில் 5 விக்கெட்களை இழந்து 168 ரன்களைக் குவித்தது சென்னை.

பின்னர் ஆட வந்த மும்பைக்கு எடுத்த எடுப்பிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. போலிங்கர் பந்து வீச்சில் டக் அவுட் ஆனார் தவான். ஆனால் கேப்டன் டெண்டுல்கர் சமாளித்து ஆடி 48 ரன்களைக் குவித்தார்.

மும்பைத் தரப்பில் அபிஷேக் நயார் 27, ராயுடு அதிரடியாக ஆடி 21, போலார்ட் புயல் வேகமாக ஆடி 10 பந்துகளில் 27 ரன்களைக் குவித்தனர்.

இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்த மும்பை 146 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

சென்னைப் பந்து வீச்சைப் பொறுத்தமட்டில் அஷ்வின், போலிங்கர், முரளிதரன், ஜகதி ஆகியோர் ஜொலித்தனர். அஷ்வின் முதல் ஓவரை மெய்டன் ஓவராகப் போட்டு மும்பையை அதிர வைத்தார். ஆனால் அவருக்கு விக்கெட் கிடைக்கவில்லை. ஜகதி 2 விக்கெட்களை வீழ்த்தினார். போலிங்கர், முரளிதரன், மார்க்கல், ரெய்னாவுக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது.

சுரேஷ் ரெய்னா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சாதனைகள்

நேற்றைய போட்டியில் பல சாதனைகள் படைக்கப்பட்டன.

ஐபிஎல் இறுதிப் போட்டி ஒன்றில் அதிகபட்ச ஸ்கோரைக் குவித்த அணி என்ற பெருமை சென்னைக்குக் கிடைத்தது.

சுரேஷ் ரெய்னா எடுத்த 57 ரன்கள்தான் ஒரு ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஒரு தனி வீரர் எடுத்த அதிகபட்ச ரன்களாகும்.

முதல் இரு போட்டித் தொடர்களை ஷான் வார்ன், கில்கிறைஸ்ட் ஆகிய வெளிநாட்டு வீரர்களைக் கேப்டன்களாக்க் கொண்ட அணிகளே வென்றிருந்தன. ஆனால் 3வது தொடரை இந்தியரைக் கேப்டனாக கொண்ட அணி வென்று புதிய சாதனை படைத்தது.

சென்னைக்கு ரூ. 6 கோடி

சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ. 6 கோடி பரிசாக கிடைத்தது. 2வது இடத்தைப் பிடித்த முமபைக்கு ரூ. 3 கோடி பரிசு கிடைத்தது.

கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா

முன்னதாக நிறைவு விழா கவர்ச்சிகரமான கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.

40 நிமிடஙகள் இது நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அவரும் இடம் பெற்று சலே சலோ, வந்தேமாதரம், ஜெய்ஹோ பாடல்களைப் பாடினார்.

பிபாஷா பாசுவின் நடனமும், ஷாஹித் கபூரின் ஆட்டமும் ரசிகர்களை மகிழ்வித்தது.

ராட்சத வீரர், கிரிக்கெட் பந்தை அடிப்பது போல காட்டப்பட்ட காட்சி ரசிர்களை வியக்க வைத்தது.

இப்படியாக கடந்த பல வாரங்களாக கிரிக்கெட் ரசிர்களை களேப்ரப்படுத்த வந்த மூன்றாவது ஐபிஎல் தொடர் விமரிசையாக நிறைவுக்கு வந்தது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.