கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிக்கும் ஈரான்

வாஷிங்டன்: 2015ம் ஆண்டுக்குள் ஈரானிடம் அமெரிக்காவைத் தாக்கும் சக்தி கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தயாராக இருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் தெரிவித்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு பென்டகன் அனுப்பியுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சில நாடுகளின் (வடகொரியா, சீனா?) உதவியோடு ஈரான் தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தை படுவேகத்தில் பலப்படுத்தி வருகிறது. இதே வேகத்தில் போனால் 2015ம் ஆண்டுக்குள் அமெரிக்காவைத் தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் (intercontinental ballistic missile- ICBM) ஏவுகணையை ஈரான் தயாரித்துவிடும்.

இந்த ஏவுகணையை வழியிலேயே தடு்த்து நிறுத்தி அழிக்கும் ஏவுகணைகளை ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா நிலைநிறுத்தியாக வேண்டும்.

ஏவுகணை தொழில்நுட்பம் மட்டுமல்லாமல், வேறு பல விவகாரங்களிலம் ஈரான் தைரியமாக செயல்பட்டு வருகிறது. இராக்கி்ல் ஷியா பிரிவு தீவிரவாதிகளுக்கு ஈரான் தொடர்ந்து பண, ஆயுத உதவிகளை செய்து வருகிறது. அவர்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறது.

அதே போல ஆப்கானிஸ்தானிலும் ஒரு பிரிவு தீவிரவாதிகளுக்கு அரசியல் ஆதரவும் நிதி, ஆயுத உதவிகளைத் தந்து வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் வேலைகளை அமெரிக்கா தொடர்ந்து செய்து வரும் நிலையில், ஈரான் அமெரிக்காவுக்கு எதிராக இந்தச் செயல்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.