தமிழர் பகுதிகளில் சிங்களத்தில் அறிவிப்புப் பலகைகள் – ராஜபக்சே உத்தரவு

கொழும்பு: தமிழர் பகுதிகளில் சிங்களத்தை புகுத்தும் வேலையை ராஜபக்சே படு வேகமாக செய்து வருகிறார். சிங்களர்களை ஏற்கனவே படிப்படியாக குடியமர்த்தி வரும் ராஜபக்சே அரசு தற்போது அறிவிப்புப் பலகைகளை சிங்களத்தில் வைக்க உத்தரவிட்டுள்ளாராம்.

தமிழர் தாயகத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியுள்ள ராஜபக்சே இப்போது அதை சிங்கள பகுதியாக மாற்றும் முயற்சிகளில் வெறித்தனமாக ஈடுபட்டு வருகிறார். தமிழர்களின் நிலங்களையும், உரிமைகளையும் இப்போது சிங்களர்கள் பறிக்க ஆரம்பித்துள்ளனர்.

பகிரங்கமாகவும், ரகசியமாகவும் தமிழர்களின் நிலங்களை சிங்களர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். இதற்கு அரசும், ராணுவமும் பக்க பலமாக உள்ளது, பாதுகாப்பும் தருகிறது.

தமிழர் பகுதிகளில் இது நாள் வரை இல்லாத சிங்களமும் இப்போது ஊடுறுவ ஆரம்பித்து விட்டது. தப்பும் தவறுமாக தமிழ்ப் பகுதிகளில் சிங்களத்தில் ஊர்ப் பெயர்கள், வர்த்தக நிறுவனங்களின் பெயர்களை எழுதி வைத்து வருகின்றனர்.

மேலும் தமிழர்களின் அடையாளங்களையும் அழித்தொழித்து வருகின்றனர். தமிழர் வழிபாட்டுத் தலங்களை காலி செய்து விட்டு புத்தர் சிலைகளை அங்கு கொண்டு வைத்து வருகிறார்கள்.

1956-ம் ஆண்டு சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று சட்டம் கொண்டு வந்தார்கள். இந்த சட்டம் தமிழர் பகுதிகளில் மட்டும் அமல்படுத்த முடியாமல் இருந்த்து. விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் தற்போது அது முழுமையாக அமலுக்கு வந்துள்ளது.

நயினா தீவு நாகபூசணியம்மன் கோவிலில் உள்ள அறிவிப்பு பலகைகளில் சிங்கள மொழி மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதற்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, கண்டி, கதிர் காமத்தில் தமிழர்களின் கோவில்களில், தமிழ், ஆங்கிலம், சிங்களத்தில் அறிவிப்பு பலகைகள் உள்ளன. முதன் முதலாக நயினா தீவு கோவிலில் சிங்களத்தில் மட்டுமே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

சிங்களத்தையும், சிங்களர்களையும் தமிழர் பகுதிகளில் படு வேகமாக ஊடுறுவச் செய்து வரும் ராஜபக்சே அரசின் செயலைப் பார்த்து தமிழர்கள் பீதியுடன் உள்ளனர்.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.