சிபிஐயின் தேடப்படுவோர் பட்டியல்: பிரபாகரனின் பெயர் நீக்கம், பொட்டு பெயர் நீக்கப்படவில்லை

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: சிபிஐயின் ​ இணையத் தளத்தில் தேடப்படுவோரின் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் பெயர் நீக்கப்படவில்லை.

பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் விவகாரத்தில் இழுத்தடித்த இலங்கை அரசு சமீபத்தில் தான் அது தொடர்பான ஒரு ஆவணத்தை மத்திய அரசிடம் அளித்தது.

கடந்த 2009ம் ஆண்டு மே 18ம் தேதி ரபாகரன்,​​ இலங்கையின் நந்திக்கடல் பகுதியில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அவரது உடலை பிரபாகரனின் முன்னாள் மெய்க்காப்பாளர் தயா மாஸ்டர்,​​ புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணா ஆகியோர் அடையாளம் காட்டினர்.

ஆனால்,​​ பிரபாகரன் மரணத்தை பல்வேறு தரப்பினர் ஏற்கவில்லை. அவர் உயிரோடு இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

அதே நேரத்தில்,​​ பொட்டு அம்மான் மரணத்தை முதலில் இலங்கை உறுதிப்படுத்தவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக சமீபத்தில் தான் இலங்கை கூறியது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் பிரபாகரன் மீது சென்னை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதே போல பொட்டு அம்மானும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில்,​ இப்போது பிரபாகரனின் பெயர் மட்டும் சிபிஐயின் இணையத் தளத்தில் தேடப்படுவோரின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிபுணர் குழு தேர்வு தீவிரம்- பான்:

இந் நிலையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்கப் போகும் நிபுணர் குழுவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறியுள்ளார்.

இந்தக் குழுவை அமைக்கப் போவதாக பான் கி மூன் கூறி ரொம்ப நாட்களாகி விட்டது. ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

இதுகுறித்து பத்திரிக்கையாளர்கள் பான் கி மூனிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், இதுதொடர்பான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. யாரெல்லாம் இதில் இடம் பெறலாம் என்ற தேர்வை நடத்தி வருகிறோம்.

இதுதொடர்பாக எனது செயலாளர் விஜய் நம்பியார், இலங்கை தூதருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றார்.

ஈழத்தில் நடந்த கடைசிக் கட்டப் போரின் போது நடந்த பல்வேறு செயல்களுக்கு விஜய் நம்பியார் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில், விஜய் நம்பியார், இலங்கை தூதருடன், நிபுணர் குழு தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவது இந்தக் குழுவின் நம்பகத்தன்மை குறித்து பெரும் கேள்விகளையும், பலத் சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.