குழந்தையுடன் பயணம் : பெற்றோரே கவனம்!

posted in: தமிழ்நாடு | 0

விருதுநகர் : விருதுநகரில் தந்தையின் தவறால், ‘லாக்’ ஆன புதிய ஐகான் காரில் சிக்கிய மூன்று வயது குழந்தை ஐஸ்வர்யா, உயிருக்கு போராடியது. அரை மணிநேர போராட்டத்திற்கு பின், கார் கண்ணாடியை உடைத்து குழந்தை மீட்கப்பட்டது. விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் முருகேசன்(34). இவர் சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வருகிறார். நேற்று காலை 10 மணியளவில் போர்டு ஐகான் புதிய காரில் (டி.என்.67-6363), மூன்று வயது மகள் ஐஸ்வர்யாவுடன் புறப்பட்டார்.

கந்தபுரம் தெரு எதிரே மதுரை ரோட்டிலுள்ள ஸ்டாண்டில் காரை நிறுத்தினார். காரில் ஏ.சி., ஓடிக்கொண்டிருந்தது. இதனால் காரிலிருந்து சாவியை எடுக்க மறந்து, ‘லாக்’ பட்டனை அழுத்திவிட்டு கதவை பூட்டினார். அருகில் உள்ள டீ கடைக்கு சென்றார். காரில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, கதவு மூடப்பட்டதும் பயந்து அழத் துவங்கியது. காரின் கண்ணாடியை தட்டி கதறியது. அருகில் இருந்தவர்கள் முருகேசனிடம் தகவல் தெரிவித்தனர். பதறிப்போன அவர், வேகமாக வந்தார். காருக்குள் குழந்தை அழுவதை கண்டு கார் கதவை திறக்க முயன்றார். கதவை திறக்க முடியாமல் தவித்துப்போன அவருக்கு அப்போது தான் தனது தவறு புரிந்தது. காரைச் சுற்றிலும் கூட்டம் கூடியது.

கூட்டத்தைப் பார்த்ததும், காருக்குள் இருந்த குழந்தை மேலும் பயந்து அழுதது. கூட்டத்திலிருந்தவர்கள் அருகிலிருந்த மெக்கானிக் ஒருவரை அழைத்து வந்தனர் மெக்கானிக் வந்தும் கதவைத் திறக்க முடியவில்லை. பின்னர், முன்புற கதவின் கண்ணாடியை உடைத்து காலை 10.30 மணிக்கு குழந்தையை மீட்டனர். வெளியே வந்த குழந்தையை முருகேசன் ஆவலோடு அரவணைத்துக்கொண்டு கண்ணீருடன் காரில் ஏறி சென்றார். அரை மணி நேரம் உயிருக்கு போராடிய குழந்தை மீட்கப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.