அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் அமலாகும்: அமெரிக்கா

புது தில்லி,​​ மார்ச் 22:​ அணுவிபத்து நஷ்டஈடு மசோதா நிறைவேறுவதில் எதிர்ப்புகள் நிலவி வந்த போதிலும்,​​ இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி உடன்பாடு விரைவில் அமலுக்கு வரும் என அமெரிக்கா நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோத்தி ஜே ரோமர் தில்லியில் நிருபர்களிடம் கூறியது:

அணுசக்தி உடன்பாட்டை அமல் செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.​ இரு நாடுகளுக்கிடையேயான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி உடன்பாடு வரும் மாதங்களில் அமலாகும் என நாங்கள் உறுதியாகவும்,​​ நம்பிக்கையாகவும் உள்ளோம்.

இந்த உடன்பாடு,​​ இரு நாடுகளின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்.​ உடன்பாட்டினை அமல்படுத்துவதில் கடந்த சில வாரங்களாகவே நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.​ இது இரு நாடுகளுக்கும் நன்மை பயப்பதாகும்.

இரு நாடுகளின் ஒத்துழைப்பு நடவடிக்கைகளில் அணுசக்தி உடன்பாடு மேலும் வலுசேர்ப்பதாய் அமையும்.தீவிரவாத ஒழிப்பு,​​ அணு எரிசக்தி,​​ ராணுவம் ஆகியவற்றிலும் இரு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என ரோமர் தெரிவித்தார்.

முன்னதாக,​​ அணுவிபத்து நஷ்டஈடு மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து,​​ மசோதா நிறைவேற்றுவதை அரசு தாற்காலிகமாக ஒத்திவைத்தது.​ இந்நிலையில் அமெரிக்க தூதர் அணுசக்தி உடன்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.​ அணுவிபத்து நஷ்டஈடு மசோதா நிறைவேற்றப்படுவதன் மூலமே,​​ இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாடு அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : dinamani

Leave a Reply

Your email address will not be published.