ஹோட்டல் பெண்கள் பாத்ரூமில் கேமரா செல்போன்-இளைஞர் கைது

கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோட்டில், ஹோட்டல் ஒன்றின் பெண்கள் பாத்ரூமில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமரா செல்போன் கண்டுபிடிக்கப்பட்டது. படம் பிடிப்பதற்காக இதை வைத்த ஹோட்டல் ஊழியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோழிக்கோட்டில் சாகர் என்ற ஹோட்டல் உள்ளது. கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்பதற்காக சமீபத்தில் ஐந்து கல்லூரி மாணவியர் அங்கு வந்திருந்தனர். மதிய உணவு சாப்பிடுவதற்காக அந்த ஹோட்டலுக்கு அவர்கள் வந்தனர்.

அப்போது ஒரு மாணவி, ஹோட்டல் பாத்ரூமுக்குச் சென்றார். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில், கேமரா செல்போன் ஒன்று வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக தனது தோழிகளிடம் இதைக் கூறினார். அவர்கள் விரைந்து வந்து செல்போனைக் கைப்பற்றினர். ஹோட்டல் மேலாளரிடம் இதுகுறித்துப் புகார் [^] கொடுத்தனர்.

விசாரணையில் ஹோட்டலில் வேலை பார்த்து வந்த நிக்கி ஜோஸ் என்பவர்தான் கேமரா செல்போனை வைத்தது தெரிய வந்தது.

இந்த நிலையில் மாணவி ஒருவர் தனது உறவினரான ராகுல் என்பவருக்குத் தகவல் கொடுக்கவே அவர் விரைந்து வந்து நிக்கி ஜோஸை தாக்கினார்.

தகவல் தெரிந்து போலீஸார் விரைந்து வந்து செல்போனைக் கேட்டனர். ஆனால் கமிஷனர் வர வேண்டும். அவரிடம்தான் தருவோம் என்று மாணவிகள் கூறி விட்டனர்.

ராகுலும் போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடவே போலீஸார் நிக்கி ஜோஸை விட்டு விட்டு ராகுலைப் பிடித்துக் கொண்டு போய் சரமாரியாக அடித்துள்ளனர். இதில் ராகுலின் காது கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதையடுத்து கமிஷனரை அணுகிய கல்லூரி மாணவிகள் செல்போனை அவரிடம் கொடுத்தனர். பின்னர் நிக்கி ஜோஸ் கைது செய்யப்பட்டார். ராகுலை தற்போது போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது காது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு காது கேட்காத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் அறிந்து ஹோட்டல் முன்பு பெரும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் கோழிக்கோடு நகரமே பரபரப்பாகி விட்டது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.