ஜட்ஜ் கருப்பண்ணசாமி : தவறு செய்தவருக்கு தண்டனை : குன்னிமரத்தான் கோவில் வினோதம்

posted in: தமிழ்நாடு | 0

மோகனூர்: குன்னிமரத்தான் கோவிலில், கோழியை ஈடுகொடுத்து, தலைகீழாக தொங்கவிட்டால் தவறு செய்தவர்களை கருப்பண்ணசாமி தண்டிப்பார் என்ற வினோத பழக்கம், நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த வளையப்பட்டியில் பிரசித்தி பெற்ற குன்னிமரத்தான் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வீற்றிருக்கும் கருப்பணசாமியை ‘கோர்ட் ஜட்ஜ்’, குன்னிமர காவலாளி என இங்கு வரும் பக்தர்கள் அழைக்கின்றனர்.இப்பகுதியில் 200 ஆண்டுகளுக்கு முன் வசித்த விவசாயிகள், விளைந்த நெற்கதிர்களை அடிக்க புறம்போக்கு இடத்தை தேர்வு செய்தனர். அந்த நிலத்தை சுத்தம் செய்து மரங்களை வெட்டிய போது அங்கிருந்த குன்னிமரத்தில் திடீரென ரத்தம் வருவதை கண்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.அப்போது, ‘கருப்பண்ணசாமி நேரில் தோன்றி, தனக்கு கோவில் கட்டி வழிபட்டால் வேண்டியதை வழங்குவேன்’ என, கூறியதாக கோவில் உருவான வரலாறு பற்றி அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கோவிலில் உள்ள குன்னிமரம் பலதரப்பட்ட நோய்களை குணப்படுத்தும் தன்மையுடையுது என்றும், இங்குள்ள துரட்டிமரம் அருகே இறந்தவர்களின் நினைவாக, ‘நடுகல்’ பதிக்கப்பட்டுள்ளதால், ‘ஆவி’ தொந்தரவு இருக்காது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இங்கு ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட 20 அடி உயரம் உள்ள குதிரை ஒன்று கம்பீரமாக நிற்கிறது. அந்த குதிரை சிலைக்கு முன் தொட்டில் கட்டினால் குழந்தை பிறக்கும் என்பதும் ஐதீகம்.அதையெல்லாம் மிஞ்சும் வகையில் உள்ளது இக்கோவிலின் சிறப்பு.

இக்கோவிலில் தற்போதும் ஈடுபோடும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. குதிரை சிலைக்கு பின் உள்ள ஈடுபோடும் இடத்தில், நீண்ட இரும்பு சங்கிலி உள்ளது. அச்சங்கிலியில் உயிருடன் இருக்கும் கோழியின் கழுத்தை சிறிது அறுத்து, தலைகீழாக தொங்க விடுகின்றனர்.’தங்கள் வீட்டில் பணம், நகை காணாமல் போனால், அதை எடுத்தவர்களுக்கு கருப்பண்ணசாமி தண்டனை வழங்குவார்’ என்பது, இங்கு வந்து ஈடுபோடுவோரின் அசைக்க முடியாத நம்பிக்கை.இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், ‘தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்’ என, கூறுகின்றனர்.

ஈடுபோட்டு சங்கிலியில் தொங்க விடப்பட்ட கோழியை, பறவை மற்றும் விலங்கினங்கள் உணவுக்காக தொடுவதில்லை.சங்கிலியில் தொங்கும் கோழிகள், எலும்பு கூடாக மாறி தானாக மக்கி விடும். யாராவது பழிவாங்கும் நோக்கில் வேண்டும் என்றே ஈடுபோட்டால், அவர்களையே திருப்பி தண்டிக்கும். ஈடுபோட்ட கோழி மக்கி மண்ணில் விழும் முன் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர் எனவும் நம்புகின்றனர்.தமிழகம் முழுவதிலும் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஈடுபோட ஏராளமானோர் வருகின்றனர். நாமக்கல், சேலம், கரூர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கோவில் திருவிழா நடக்கும். தவறு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கித்தரவும், வீண்பழி சுமத்தியவரை தண்டிக்க முடியும் என்ற நம்பிக்கையில் பல மாவட்டங்களில் இருந்து வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கோவிலுக்கு ஈடுபோட வந்த பக்தர் ஒருவர் கூறுகையில், ”இக்கோவில் பெருமை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டுள்ளேன். தற்போது முதன் முறையாக இக்கோவிலுக்கு வந்துள்ளேன். ஈடுபோட்டால் வேண்டியது நடக்கும் என்பது உண்மை. நானும் ஒரு காரியமாக ஈடுபோட வந்துள்ளேன்,” என்றார்

Source & Thanks: dinamalar

Leave a Reply

Your email address will not be published.