தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க மகிந்த ராஜபக்சவாலேயே முடியும்: முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

சிறிலங்காவில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை யாராவது ஒருவரால் தீர்க்க முடியும் என்றால், அது தற்போதைய குடியரசு அதிபர் மகிந்த ராஜபக்சவாலேயே முடியும் என்று தெரிவித்துள்ளார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்.

அண்மையில் கொழும்புக்கு வந்திருந்த இந்திய வெளிவிவகாரத்துறைச் செயலாளர் நிருபமா ராவைச் சந்தித்துப் பேசிய போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

சிங்கள மக்களின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் ராஜபக்ச வென்றெடுத்திருக்கிறார் என்பதால் அவராலேயே இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று ஹக்கீம் கூறியதாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

உண்மையில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குக் குடியரசுத் தலைவர் விரும்பினார் எனில், அவரால் அதனைத் தீர்த்து வைக்க முடியும் என்று தனது தலைவர் நிருபமா ராவிடம் தெரிவித்தார் என காரியப்பர் மேலும் கூறினார்.

தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கத் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் குடியரசு அதிபர் மகிந்த ராஜபக்ச செய்வார் என்ற நம்பிக்கையுடன் கூடிய எதிர்பார்ப்பைத் தான் கொண்டிருக்கிறார் என ராவ் அப்போது குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்படும் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கான தனது விருப்பத்தைக் குடியரசுத் தலைவர் தன்னிடம் வெளிப்படுத்தினார் என, ஹக்கீமுடனான சந்திப்பின் போது நிருபமா ராவ் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் அனைத்துலக விவகார இயக்குநர் ஏ.எம்.பாயிஸ், பதில் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோரும், கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் அசோக் கந்த, இணைச் செயலாளர் வை.திருமூர்த்தி, அரசியல் ஆலோசகர் ரி.ஷியாம் ஆகியோரும் உடனிருந்தனர்.

“சிங்களப் பெரும்பான்மையினரிடம் இருந்து தெளிவான மக்களாணையை மகிந்த ராஜபக்ச பெற்றுள்ள நிலையில், ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றை அவர் முன்வைத்தால் அது சிங்கள மக்களால் நிச்சயமாக அங்கீகரிக்கப்படும். எந்த ஒரு தீர்வையும் நடைமுறைப்படுத்துவதற்கு அது மிக முக்கியமானதாகும்” என்றார் காரியப்பர்.

அதேசமயம், இந்தியச் செயலருடன் நடத்திய பேச்சுக்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதியான சுரேஷ் பிரேமச்சந்திரன், ஏப்ரல் 8ஆம் நாள் நடக்க உள்ள பொதுத் தேர்தலை அடுத்து தமது கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை இந்தியா வருமாறு நிருபமா ராவ் அழைப்பு விடுத்துள்ளார் எனத் தெரிவித்தார்.

இந்தியச் செயலருடனான அந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராசா மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கூட இருந்தனர்.

தமது பேச்சுக்கள் முக்கியமாக இரு விடயங்களைப் பற்றியதாக இருந்தது என பிரேமச்சந்திரன் கூறினார். தமிழர்களின் இனப் பிரச்சினை மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு ஆகியனவே அந்த இரு விடயங்களுமாகும்.

“எமது கலந்துரையாடலின் போது, இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுப்பது மற்றும் அவர்களின் நாளாந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது என்பவற்றில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம்” என்றார் சுரேஷ்.

Source & Thanks : puthinappalakai

Leave a Reply

Your email address will not be published.