ரயில்வே பிளாட்பாரத்தை சாலையாக மாற்றிய தேவெ கெளடா

பெங்களூர்: அப்பட்டமான விதி மீறலாக, பெங்களூர் ரயில் நிலையத்திற்குள் காருடன் பயணித்த முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, ரயில் நிற்கும் இடம் வரை காருடன் சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து மிட் டே வெளியிட்டுள்ள செய்தி…

பெங்களூர் ரயில் நிலையத்திற்கு நேற்று தனது காரில் வந்தார் கெளடா. அவரும், அவருடன் வந்தவர்களும் இரண்டு டயோட்டா பார்ச்சூன் கார் [^]களில் பயணித்தனர்.

ரயில் நிலையம் வந்த கெளடா மற்றும் அவருடன் வந்தவர்கள் பயணித்த கார்கள் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஏறி சாலையில் செல்வது போல உள்ளே சென்றன.

டெல்லி செல்லும் ரயிலை நெருங்கிய கார்கள் அங்கு போய் நின்றன. அந்த ரயிலில் ஏராளமான விவசாயிகள் தேவெ கெளடா டெல்லியில் நடத்தவுள்ள போராட்டத்தில் பங்கேற்பதற்காக ரயில் ஏற வந்திருந்தவர்கள்.

ரயிலில் அமர்ந்திருந்த விவசாயிகளைப் பார்த்துக் கையசைத்த கெளடா பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். பிறகு அவர் விமானத்தைப் பிடித்து டெல்லி போனார்.

அதாவது தனது கட்சியின் போராட்டத்தில் பங்கேற்பதற்காக ரயில் ஏறப் போனவர்களை வழியனுப்பி வைப்பதற்காக விதிகளை மீறி காருடன் ரயில் நிலையத்திற்குள் நுழைந்து, ரயில் வரையும் போய் கையசைத்து விட்டு வந்துள்ளார் கெளடா.

இதுகுறித்து கோட்ட ரயில்வே மேலாளர் அகில் அகர்வாலிடம் கேட்டபோது, உண்மையில் இந்த சிறப்பு ஏற்பாட்டை கெளடா கோரியிருந்தாரா அல்லது அவருக்குத் தேவைப்பட்டதா என்று எனக்குத் தெரியவில்லை.

மருத்துவ அவசர காலத்திற்கு மட்டும்தான் பிளாட்பாரங்களில் காரை செலுத்த முடியும். மற்ற எந்தக் காரணத்திற்காகவும் கார்கள் பிளாட்பாரத்தில் செல்ல அனுமதி இல்லை என்றார்.

ஆனால் கெளடா விதிமீறலில் ஈடுபடவில்லை என்று தென் மேற்கு ரயில்வே கூறியுள்ளது. மெயின் கேட்டிலிருந்து 10 முதல் 15 மீட்டர் தொலைவுக்குத்தான் கெளடா காரில் பிளாட்பாரத்தில் பயணம் செய்ததாக அவர்கள் கூறுகின்றனர்.

கெளடா காருடன் ரயில் நிலையத்திற்குள் போன விவகாரம் பெங்களூர் அரசியல்வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.