சென்னை திருவல்லிக்கேணி மேன்ஷனில் தங்கியிருந்த 13 காஷ்மீர் இளைஞர்கள் கைது

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சட்டசபைக் கட்டடம் திறக்கப்படவுள்ள நிலையில், சட்டசபைக் கட்டடத்திற்கு அருகில் உள்ள திருவல்லிக்கேணியில் மேன்ஷனில் தங்கியிருந்த 13 ஜம்மு காஷ்மீர் மாநில இளைஞர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய சட்டசபை கட்டப்பட்டு வருகிறது. இதன் திறப்பு விழா வருகிற 13ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் வருகின்றனர்.

இதையடுத்து இலங்கைத் தமிழ் அகதிகள் 3 நாட்களுக்கு வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சட்டசபை வளாகத்திற்கு அருகில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ள மேன்ஷன்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பகுதி மேன்ஷன்களின் சொர்க்கபுரியாகும். ஏகப்பட்ட மேன்ஷன்கள் இங்கு உள்ளன.

வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வேலைக்கு வரும் இளைஞர்கள் இங்குதான் தங்கியிருந்து வேலைக்குப் போய் வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த மேன்ஷன்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேன்ஷன்கள் தவிர இப்பகுதியில் உள்ள லாட்ஜுகளிலும், போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று ஒரு மேன்ஷனில் சோதனை நடத்திய போது ஜம்மு- காஷ்மீரைச் சேர்ந்த ஷா நவாப்கான் (22), பிலால் அகமது (20), ரியாஸ் அகமது (24), அர்ஷத்லோனா (25). ஷபீர்பாத் (23), மகராஜ்தார் (25), முகமது அல்பாப்தார் (24), நபிபாத் (24), ஹபீர் அகமது (24), பிலால் அகமது (24), முஸ்தபா அகமது (22), தஸ்தூர் உசேன் (24), குலாம் முகமது (24) ஆகியோர் தங்கியிருந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த 13 பேரும் கடந்த நான்கு நாட்களாக இங்கு தங்கியுள்ளனர். சுடிதார், போர்வை விற்கும் தொழில் செய்வதாகவும், கடந்த 6 மாதமாக சென்னையில் தங்கி இருந்து விற்பனை செய்வதாகவும் அவர்கள் கூறினர்.

ஆனால் அவர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் இருப்பதால், அனைவரின் கைரேகைகளை பதிவு செய்து டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சமீபத்தில் ராயபுரம் பகுதியில் 2 பிச்சைக்காரர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. மேலும் அவர்கள் இருவரிடமும், ரூ.36ஆயிரம் பணமும் இருந்தது.

இந்த நிலையில் தற்போது மேன்ஷனில் 13 பேர் தங்கியிருந்த விதம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.