நேர்மையான வேட்பாளருக்கு ஓட்டுப் போட காலில் விழுந்து விழிப்புணர்வு பிரசாரம்

posted in: தமிழ்நாடு | 0

பென்னாகரம் :”பணம் வாங்கி ஓட்டுப் போடாதீர்கள்; நேர்மையான வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடுங்கள்’ என, தொகுதி மக்களின் காலில் விழுந்து, விழுப்புரம் சத்தியாகிரக இயக்கத்தினர், விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர். பாதுகாப்பு போலீசாரோ, தேர்தல் எப்போது முடியும் என நாட்களை எண்ணி வருகின்றனர்.


பென்னாகரம் இடைத்தேர்தல், 27ம் தேதி நடக்கிறது. மனு தாக்கலுக்கு பிறகு வேட்பாளர்கள், தங்களது ஆதரவாளர்களுடன் ஓட்டு கேட்டு வருகின்றனர். கிராமப்புறங்களில் முதியோர், பெண்கள் காலில் விழுந்து, பா.ம.க.,வினர் ஓட்டு கேட்டது கண்ட, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினரும், இந்த நடைமுறையையே பின்பற்றுகின்றனர்.இந்நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த சத்தியாகிரக இயக்கத்தினர், தலைவர் ராமகிருஷ்ண சாஸ்திரி தலைமையில், நிர்வாகிகள் சிலர், பாப்பாரப்பட்டி, இண்டூர் பகுதிகளில் நேற்று, துண்டு பிரசுரம் வினியோகித்தும், காலில் விழுந்தும் பிரசாரம் செய்கின்றனர்.”வன்முறை, லஞ்சம், ஜாதி வெறியில்லாத நபர்கள், வேட்பாளர்களாக போட்டியிட்டால், அவர்களுக்கு உங்கள் ஓட்டுக்களை போடுங்கள்; பணம் வாங்கி ஓட்டு போடும் நிலை இனி வேண்டாம்’ என, அவர்கள் பிரசாரத்தில் கூறி வருகின்றனர்.

சத்தியாகிரக அமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணசாஸ்திரி கூறியதாவது:வரும் 2015ல், இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு, இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வன்முறை, லஞ்சம், ஜாதி போன்றவற்றை ஒழிக்க, கடந்த ஐந்து ஆண்டாக மக்கள் காலில் விழுந்து வருகிறோம்.பென்னாகரத்திலும், வன்முறை, ஜாதி, லஞ்சம் போன்றவை தலைவிரித்தாடுகிறது. அவற்றை தடுக்கும் விதமாக, நேர்மையான வேட்பாளரை மக்கள் தேர்ந்தெடுக்க வலியுறுத்தி, அவர்கள் காலில் விழுந்து பிரசாரம் செய்கிறோம். இதுவரை, 24 லட்சம் பேர், காலில் விழுந்து அவர்களை விழிப்புணர்வு அடைய வைத்துள்ளோம்.இவ்வாறு ராமகிருஷ்ண சாஸ்திரி கூறினார்.

வறட்சி தொகுதியான பென்னாகரத்தில், கோடை துவங்கும் முன்பே, வெயில் கொளுத்தி வாட்டுகிறது. இடைத்தேர்தல் காரணமாக, வெளி மாவட்ட போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். வெட்ட வெளியாக இருப்பதால், அங்கு பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார், “இடைத்தேர்தல் எப்போது முடியுமோ’ என நாட்களை எண்ணிக் கொண்டுள்ளனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.