இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுக்க வேண்டும்: ஜமா உத் தவா

இஸ்லாமாபாத், பிப். 28: பேச்சுவார்த்தைக்கு இந்தியா ஒத்துழைக்காமல் இருந்தால் பாகிஸ்தான் போர் தொடுக்க வேண்டும் என்று ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் முகமது சயீத் கூறினார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.

மும்பை தாக்குதலுக்கு திட்டமிட்டு அதை நிறைவேற்றியதாக இந்தியா குற்றம்சாட்டி வருவது குறித்து அவரிடம் கேட்டபோது, இதை எந்த நீதிமன்றத்திலாவது இந்தியா நிரூபித்துவிட்டால் அதன்பிறகு இந்தியா என்ன சொல்கிறதோ அதை நான் கேட்கிறேன் என்றார் அவர்.

இந்தியாவுக்கு எதிராக போராட இளைஞர்கள் காஷ்மீருக்குள் ஊடுருவ வேண்டும் என்பது சரிதானா என்று கேட்டபோது, இதில் கிஞ்சித்தும் சந்தேகம் இல்லை. காஷ்மீருக்குள் நுழைந்து இந்தியாவுக்கு எதிராக போரிட வேண்டும் என்றார் அவர்.

காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான் அரசுக்கு தைரியமில்லை என்றும் அவர் புகார் கூறினார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்து வந்த அமைதிப் பேச்சை, மும்பை தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா நிறுத்திவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கடந்த 25-ம் தேதி இரு நாட்டு வெளியுறவுச் செயலர்களும் சந்தித்துப் பேசினர். இந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து பேச ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு இந்தியா ஒத்துழைக்காவிட்டால் பாகிஸ்தான் போர் தொடுக்க வேண்டும் என்று ஹபீஸ் சயீத் மிரட்டி உள்ளார்.

தொலைக்காட்சி பேட்டியின்போது சயீத் தனது முகத்தை காட்டவில்லை.

தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் நிறுவனர் சயீத். பின்னர் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவரானார். மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டு டிசம்பரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் சயீத். இவர் தலைமையிலான ஜமாத் உத் தவா அமைப்புக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது.

6 மாதங்கள் கழித்து லாகூர் உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது. அவரது விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு மேல் முறையீடு செய்தது. ஆனால் இந்த வழக்கு பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

Source & Thanks : dinamani

Leave a Reply

Your email address will not be published.