பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வாழும் இந்தியர்கள் நாடு திரும்பலாம்: ப.​ சிதம்பரம்

புது தில்லி,​​ பிப்.11:​ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீர் பகுதியில் வாழும் இந்தியர்கள் வன்முறையைக் கைவிட்டு இந்தியாவுக்கு வர விரும்பினால் அவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.​ சிதம்பரம் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுடன் வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற சிதம்பரம் மேலும் கூறியது:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதியில் வாழும் இளைஞர்கள் இந்தியாவுக்குத் திரும்ப விரும்பினால் அதை அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் உமர் அப்துல்லா ஆலோசனை கூறினார்.​ இதை மத்திய அரசு ஏற்கிறது.​ ஆனால் அவ்விதம் சென்றவர்கள் வன்முறையைக் கைவிட்டுவிட்டு நாடு திரும்ப வேண்டும்.

முதல்வர் கூறிய ஆலோசனையை எவ்விதம் செயல்படுத்துவது என்பது தொடர்பான வழிமுறைகள் உருவாக்கப்படும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய பிரதமர் மன்மோகன் சிங் ஒரு குழுவை நியமித்துள்ளார்.​ இந்த குழு அளித்த பரிந்துரையில் இந்த ஆலோசனையும் உள்ளது.

இந்தியாவுக்கு திரும்ப விரும்புவோரை வரவேற்கும் பணிகள் ஒரு திட்டமாகத்தான் செயல்படுத்தப்படும்.​ அடையாளம் காண்பது,​​ அவர்களை முழுவதும் சோதனையிடுவது,​​ அவர்களது பயண விவரங்களை ஆய்வு செய்வது பின்னர் மறுவாழ்வு அளிப்பது என்ற அடிப்படையில் அவர்கள் இந்தியாவிற்குள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ​(பிஓகே)​ பகுதியானது இந்தியாவின் ஒரு பகுதிதான்.​ ஏதோ ஒரு காரணத்துக்காக எல்லை தாண்டி அப்பகுதிக்குச் சென்ற இந்தியர்களை மீண்டும் அழைப்பதற்காக இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று சிதம்பரம் கூறினார்.

அமைச்சர்களிடையே முரண்பாடு:​​ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வாழும் இந்தியர்கள் விரும்பினால் மீண்டும் காஷ்மீருக்கு வரலாம் என சிதம்பரம் அறிவித்துள்ளார்.​ ஆனால் எல்லை தாண்டி சென்றவர்களை மீண்டும் இந்தியாவிற்குள் அனுமதித்தால் அதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் தற்போது மத்திய அமைச்சராக உள்ள குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

1989-ம் ஆண்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பாகிஸ்தான் பகுதிக்குச் சென்றுவிட்டனர்.​ இதில் பலர் இந்தியாவுக்குள் ஊடுருவி வந்துவிட்டனர்.​ இப்பகுதியில் வாழும் 800 பேர் மீண்டும் இந்தியாவுக்குள் வர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்துவோம் என்று சிதம்பரம் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் மாநில எதிர்க்கட்சித் தலைவரிடமும் இதுகுறித்து விவாதித்து அதன்பிறகு திட்டம் வகுக்கப்படும் என்று அவர் கூறினார்.

இதனிடையே தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டில்,​​ வன்முறையைக் கைவிட்டு சகஜ வாழ்க்கை வாழ விரும்பும் தீவிரவாத இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளதாக முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்திருந்தார்.

முதல்வரின் இந்த யோசனையானது,​​ பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய வழிவகுத்துவிடும் என்று குலாம் நபி ஆஸôத் எச்சரித்துள்ளார்.

வன்முறையைக் கைவிட்டுவிட்டோம் எனக் கூறும் இளைஞர்களுக்கு யார் உத்தரவாதம் அளிப்பது.​ இந்த இளைஞர்கள் பாகிஸ்தானுக்குச் சென்று ஆயுதப் பயிற்சி பெறவில்லை என்று யார் உறுதி அளிக்கமுடியும்.​ பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்த சந்தர்ப்பத்தின் மூலம் இந்தியாவுக்குள் நுழைய முயற்சிக்கின்றனர் என்று ஆஸôத் மேலும் தெரிவித்தார்.

மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளின் பட்டியலை இந்தியா அளித்தபிறகும்,​​ இதுவரை யாரையும் அந்நாட்டு அரசு ஒப்படைக்கவில்லை.​ இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்ப இத்தகைய உத்தியை பாகிஸ்தான் பின்பற்றாது என யாராவது கூற முடியுமா?​ என்று ஆஸôத் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ளவர்களை மீண்டும் இந்தியாவுக்குள் அழைக்கலாம் என்ற யோசனை 2006-ம் ஆண்டே எழுந்தது.​ ​ உமர் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் பாகிஸ்தான் சென்று திரும்பியபோது இக்கருத்து முன்வைக்கப்பட்டது.

ஆனால் இப்பிரச்னை அப்போது சட்டப்பேரவையில் விவாதத்துக்கு வந்தபோது,கடும் எதிர்ப்பு எழுந்தது.

Source & Thanks : dinamani

Leave a Reply

Your email address will not be published.