மத்திய அரசுக்கு மும்பைதான் ஏ.டி.எம்.:​ உத்தவ் பேச்சு

மும்பை,பிப்.5: மத்திய அரசாங்கம் மும்பை மாநகரைத் தன்னுடைய ஏ.டி.எம்.மாகத்தான் கருதி தேவைப்படும்போது பணத்தைக் கறக்கிறது என்று சாடினார் சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே.

ராகுல் காந்தியின் மும்பைப் பயணம் குறித்து நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் தெரிவித்ததாவது:

“ராகுல் காந்தியின் பயணத்தின்போது அவருக்கு அளித்த பாதுகாப்பானது,​​ மாநகர வரலாற்றில் எந்தவொரு தனி நபருக்கும் இதுவரை தரப்பட்டிருக்கவில்லை.

ஒரு தனி நபருக்கு அளித்த இந்த பாதுகாப்பை மாநகருக்கு அளித்திருந்தால் பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகள் தாக்குதலே நடத்தியிருக்க முடியாது.

மாநில முதலைமைச்சர் அசோக் சவாண் சுமார் 2 மணி நேரத்துக்கு ஒரு ஏட்டையா போலவே மாறி,​​ பாதுகாப்பு கொடுத்தார்.​ மாநில போலீஸ்துறை அமைச்சரோ ராகுலின் மிதியடிகளை பத்திரமாக பார்த்துக் கொண்டார்.

அடிக்கு ஒரு போலீஸார் சீருடையிலும் ​ சீருடையில் இல்லாமலும் இருந்ததால் புறநகர் மின்சார ரயிலிலும் ஏறிச் சென்றார் ராகுல் காந்தி.​ வழியில் ஏ.டி.எம்.முக்குச் சென்று பணம் எடுத்தாராம்.​ மும்பை மாநகரமே மத்திய அரசுக்கு ஏ.டி.எம்.மாகத்தானே இருக்கிறது?​ அதனால்தானே இந்தியர்கள் அனைவருக்குமே மும்பை சொந்தம் என்கிறார்கள்.

இந்த மனப்பான்மையைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீஸார் செய்த கெடுபிடிகளையும் பார்த்தால் இத்தாலியை ஆண்ட சர்வாதிகாரி முசோலினியே மீண்டும் வந்துவிட்டதைப்போல இருந்தது.

சிவசேனைக்கு அஞ்சியே ராகுலின் சில நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு அவரது பயண நேரத்தைச் சுருக்கிவிட்டனர்.​ அது மட்டும் அல்லாமல் அவர் வரும் வழியிலும் கடைசி நேரத்தில் மாற்றங்களைச் செய்தனர்.

கறுப்புக் கொடியுடன் ராகுலை வரவேற்போம் என்றோம்;​ பலத்த போலீஸ் காவல் போடப்பட்டிருந்தாலும் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம்.

ராகுல் காந்தி மட்டும் சோர் பஜார் ​(திருட்டு மார்க்கெட்)​ பக்கம் போயிருந்தால் நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ஹேமந்த் கர்கரே அணிந்த குண்டு துளைக்க முடியாத மேல் சட்டையைக் கூட பார்த்திருக்க முடியும்’என்றார் உத்தவ்.

Source & Thanks : dinamani

Leave a Reply

Your email address will not be published.