நிரூபித்து விட்டார் மாயாவதி : அமர்சிங் பாராட்டு !

புதுடில்லி : சமாஜ்வாடி கட்சியில் இருந்து விலகிய அமர்சிங் திடீரென உத்திரபிரதேச முதல்வர் மாயாவதியை பாராட்டி பேசியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் : நான் முலாயம் சிங் யாதவுடன் மிகவும் நெருக்கமாக இருந்ததால் என்னை மிகப் பெரிய அரசியல் எதிரியாக பார்த்து வந்தார் மாயாவதி.

நானும், மாயாவதியின் பாதிப்பிலிருந்து முலாயமை கண்ணை இமை காப்பது போல காத்து வந்தேன். இப்போது நான் முலாயமை காத்து வந்த பாதுகாப்பு வளையத்தை விலக்கிக் கொண்டு விட்டேன். தாங்கள்தான் முலாயம் சிங்கின் காவலர்கள் என்று கூறிக் கொள்வோர் தங்களது விசுவாசத்தைக் காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. நான் கட்சியிலிருந்து விலகிய பின்னர் மாயாவதியை இதுவரை சந்திக்கவில்லை. எதிர்காலத்தில் நான் சோனியாவுடன் சேருவேனா அல்லது மாயாவதியுடன் சேருவேனா என்பது குறித்து எனக்குத் தெரியாது. இருவரும் தத்தமது பாதையில் தனித்துவத்துடன் போய்க் கொண்டிருக்கும் பெரிய அரசியல் தலைவர்கள். மாயாவதிஉ.பியில் தன்னை நிரூபித்துள்ளார். சோனியா தேசிய அளவில் தனக்கு விடப்பட்ட சவால்களை முறியடித்து வென்றவர். எதிர்காலத்தில் என் பாதை எப்படியிருக்கும் என்பதை இப்போதைக்கு ‌சொல்ல முடியாது என்றார்.

ஒரே நி‌லையில் நானும் , மாயாவதியும் : மாயாவதி குறித்த எனது நிலைப்பாடு இப்போதும் மாறவில்லை. இருந்தாலும் முலாயம் சிங் யாதவுடன் நான் இருந்த போது இந்திய அரசியலில் ஒரு மோசமான தருணத்தை சந்தித்தேன். அது முலாயம் சிங் யாதவ் அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை மாயாவதி விலக்கியதால் அப்போது முலாயமின் ஆட்சி கவிழ்ந்த காலகட்டம். அப்போது முலாயமும், முலாயமின் வாரிசுகளும், குடும்பத்தினரும், லக்னோ அரசினர் விருந்தினர் இல்லத்திற்குச் சென்று அங்கு தங்கியிருந்த மாயாவதியை மிகவும் இழிவாகப் பேசி அவமானப்படுத்தினர். மாயாவதிக்காக மிகவும் வருந்துகி‌றேன். அப்போது அவர் சந்தித்ததை இன்று நான் சந்திக்கிறேன். நானும், மாயாவதியும் ஒரே நிலையில் தான் இருக்கிறோம் என்றார்

அமர்சிங்கின் திடீர் மாயாவதி துதி இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.