71 ஏக்கர் நிலத்தை சுவாகா செய்த ராணுவ துறை செயலர் ; ராணுவ கோர்ட் விசாரிக்க உத்தரவு

புதுடில்லி: ராணுவ கண்டோன்மென்ட்க்கு சொந்தமான 71 ஏக்கர் நிலத்தை தனக்கு வேண்டிய ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு வழங்கி மோசடி செய்த இந்திய ராணுவ துறை செயலர் லெப்டினன்ட் ஜெனரல் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி இவர் மீது ராணுவ கோர்ட்டில் விசாரணை நடத்தப்படும். இந்திய ராணுவ துறை செயலர் லெப்டினன்ட் ஜெனரலாக இருந்தவர் அவ்தேஷ் பிரகாஷ். மேற்குவங்கம் டார்ஜீலிங் அருகே சுக்னா ராணுவ கண்டோன்மென்ட்க்கு சொந்தமான நிலம் இருந்தது. இங்கு இருந்த 71 ஏக்கர் நிலத்தை தனது குடும்ப உறவினரான திலீப் அகர்வால் என்பவருக்கு வழங்கிட உதவி புரிந்துள்ளார். இந்த நிலத்திற்கு என். ஓ. சி., சான்று வழங்கியுள்ளார். இதற்கு சில ராணுவ அதிகாரிகளும் துணையாக இருந்துள்ளனர். தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்ற அரசின் விதிமுறை இருந்தும் அவர் இந்த நிலத்தை விற்க துணையாக இருந்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்த ஆவணங்களை பரிசீலித்த அமைச்சர் ஏ.கே., அந்தோணி , இந்த ராணுவ செயலர் அவ்தேஷ் பிரகாஷ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு குறித்து ராணுவ தளபதி தீபக் கபூர் , ராணுவ உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதன்படி நில மோசடியில் ஈடுபட்ட செயலர் மீது ராணுவ கோர்ட்டில் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இன்று அல்லது நாளை முறையான நடவடிக்கை எடுக்கப்படும் . ராணுவ செயலர் அவ்தேஷ் பிரகாஷ் வரும் 31 ம் தேதி ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அவர் பெற வேண்டிய அனைத்து சலுகைகளையும் இழக்க நேரிடும். ராணுவ துறையில் ஒரு செயலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.