நதிகளை இணைத்தால் வெள்ளப் பெருக்கை தவிர்க்கலாம்: அப்துல் கலாம் யோசனை

posted in: தமிழ்நாடு | 0

சென்னை : “”மாநிலங்களில் உள்ள நதிகளை இணைத் தால், வெள்ளப் பெருக்கை தவிர்க்கலாம்,” என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

தி.நகர், ஹோலி ஏஞ்சல்ஸ் மேல் நிலைப் பள்ளியின் பவள விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்துல் கலாம் பேசியதாவது: மாணவர்கள் அவர்கள் வீடுகளில் கட்டாயம் நூலகத்தை அமைக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரமாவது நூலகத்தில் உள்ள புத்தகங்களை படிப்பது என, மாணவர்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களும், பெற்றோர்களும் இதை ஊக்குவிக்க வேண்டும். லட்சியம் இல்லாமல் வாழ்வதை, மாணவர்கள் பெரும் குற்றமாக கருத வேண்டும். பொருளாதாரம் மற்றும் அறிவியலில் நாட்டில் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளன. மேலும், மாநிலங்களில் உள்ள நதிகளை இணைத்தால் வெள்ளப் பெருக்கை தவிர்க்கலாம். இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கு அப்துல் கலாம் அளித்த பதில்:

* நிலவில் நீர் இருந்தால் மனிதனால் அங்கு வசிக்க முடியுமா?

பூமியில் தற்போது 600 கோடி மக்கள் வாழ் கின்றனர். எதிர் காலத்தில் இது 900 கோடியாக உயரும். மக்கள் தொகையின் அதிகரிப்பால், நிலவில் நீர் இருந்தாலும் அங்கு மனிதர்கள் வாழ முடியாது. அந்த நீரை விஞ்ஞான ரீதியாகவும், தொழில் நுட்ப நீதியாகவும் உபயோகப்படுத்தலாம்.

* இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி எப்படி உள்ளது?

வெளிநாடுகளில் பல நிறுவனங்கள் பொருளாதார மந்த நிலையால் பெரும் வீழ்ச்சி அடைந்தன. இந்தியாவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இன்னும் பத்தாண்டுகளில் தொழில் நுட்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், பல முன்னேற் றங்கள் ஏற்படும். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில், இந்தியா அபரிமிதமான வளர்ச்சி அடையும்.

* பூமி வெப்ப மயமாதலை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டும். கார்பன் – டை ஆக்சைடு அதிகரிப்பால், பூமி வெப்பமாகிக் கொண்டிருக்கிறது. மரம் வளர்ப்பதன் மூலம், கார்பன் – டை ஆக்சைடு உட்பட பல வாயுக்களை கட்டுப்படுத்தலாம். எனவே, ஒவ்வொரு மாணவரும் பத்து மரங்களை நட வேண்டும் என, உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.