மெரிக்கா மீது தாக்குதல் தொடரும் : அல் குவைதா மீண்டும் மிரட்டல்

சனா (ஏமன்): அமெரிக்க விமானத்தைத் தகர்க்க மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டைத் தயார் செய்து கொடுத்ததாகவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அது வெடிக்காமல் போய்விட்டது என்றும், அல் குவைதா இயக்கம் கூறியுள்ளது.

அமெரிக்காவில் மேலும் பல வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும், அந்த இயக்கம் கூறியுள்ளது.நெதர்லாந்து, ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து, கிட்டத்தட்ட 300 பயணிகளுடன், “நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸ்’ விமானம், கடந்த 25ம் தேதி, அமெரிக்காவின், டெட்ராய்ட் நகர் சென்றது. அந்த நகரை நெருங்கிக் கொண்டிருந்தபோது, பயணி போல வந்திருந்த, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த, உமர் பரூக் அப்துல்முதாலப் என்பவன், தன் காலில் கட்டியிருந்த ஒரு கருவிக்கு, திரவம் ஒன்றை ஊசி மூலம் செலுத்த முயற்சித்தான். சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து, விமான ஊழியர்கள் உதவியுடன், அவனைப் பிடித்தனர். டெட்ராய்ட் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கி, அவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.நெடு நேர விசாரணைக்குப் பின், அவன் அல் குவைதா இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதும், விமானத்தை முற்றிலும் தகர்க்க பெரிய சதித் திட்டத்துடன் வந்திருந்தான் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அமெரிக்கா வரும் அனைத்து விமானங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும், கடுமையான சோதனைக்குப் பின்னரே விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுகின்றனர். அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னறிவிப்பு ஏதும் இன்றி நடக்கும்: இந்தச் சதித் திட்டத்திற்கு பொறுப்பேற்பதாக, அல் குவைதா பயங்கரவாத இயக்கம், இணைய தளம் மூலம், திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:எங்கள் இயக்கத்தினரைத் தாக்கி அவர்களைக் கொன்று குவித்தவர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது. அமெரிக்கர்களுக்குச் சரியான பாடம் புகட்டும் வகையில், அவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்துவோம். பழி வாங்கும் நடவடிக்கையாக, முன்னறிவிப்பு ஏதும் இன்றி இது நடக்கும். இஸ்லாம் இயக்கத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அனைவரையும் அரேபிய நாடுகளிலிருந்து வெளியேற்ற வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில், ஏமன் நாட்டில் அல் குவைதா இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 30 பேர் கொல்லப்பட்டனர். இந்த இயக்கத்தைச் சேர்ந்த பலர், கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு அமெரிக்க ஜெட் விமானங்களே பயன்படுத்தப்பட்டன.இதையடுத்தே இந்த அச்சுறுத்தல் அறிக்கை வெளியாகி உள்ளது.

Source & Thanks ; dinamalar

Leave a Reply

Your email address will not be published.