ஒரு தலைக்காதலால் விபரீதம்: 3 பேரை உயிரோடு எரிக்க முயன்ற வாலிபர் கைது; கமாண்டோபடை வீரர்களை வரவழைத்து 4 மணி நேரம் போராடி பிடித்தனர்

posted in: தமிழ்நாடு | 0

பழவந்தாங்கல் பகுதி மக்களையும், போலீஸ்காரர்களையும் இன்று காலை ஒரு வாலிபர் படாதபாடு படுத்திவிட்டார். எல்லாவற்றுக்கும் காரணம் ஒருதலைக் காதல்.

பழவந்தாங்கல் ஏழூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பொன்பாண்டி (வயது60). இவரது மனைவி ஆதிலட்சுமி. இவர்களுக்கு செந்தில்குமார் என்ற மகனும், ஜெயக்கொடி என்ற மகளும் உள்ளனர்.

ஜெயக்கொடிக்கு கடந்த மாதம்தான் திருமணம் நடந்தது. அவர் கணவருடன் திருச்சியில் வசித்து வருகிறார்.
ஜெயக்கொடி வீட்டுக்கு அவர்களது குடும்ப நண்பர் ஆறுமுகம் என்பவர் அடிக்கடி வந்து செல்வார். இவர் ஏற்கனவே செல்வி என்ற பெண்ணை திருமணம் செய்து பிரிந்து வாழ்கிறார். பெயிண்டரான இவருக்கு பொன்பாண்டி குடும்பத்தினர் அடிக்கடி உதவிகளும் செய்வதுண்டு.

ஆனால் இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்ட கதையாக ஜெயக்கொடி மீது ஆறுமுகத்துக்கு ஆசை ஏற்பட்டது. ஒரு தலையாக ஜெயக்கொடியை காதலித்தார். தன் காதலை வெளிப்படுத்தாமல் மனதுக்குள்ளேயே வைத்திருந்தார்.

இந்த நிலையில் ஜெயக்கொடிக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து நிச்சயதார்த்தமும் நடத்தினார்கள். இதை கண்டு ஆறுமுகம் துடித்துப்போனார். திருமணத்துக்கு 10 நாட்களுக்கு முன்பு அவர் ஜெயக்கொடியை வர்ணித்து நிறைய கவிதைகள் எழுதினார். அதை கொண்டு போய் ஜெயக்கொடியிடம் கொடுத்து என்னை திருமணம் செய்துகொள் என்றார்.

ஆறுமுகத்திடம் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றத்தை கண்டு பொன்பாண்டி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ஜெயக்கொடிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுவிட்டது. இனி இந்த பக்கமே வரக்கூடாது என்று எச்சரிக்கை செய்து அனுப்பினார்கள் என்றாலும் ஜெயக்கொடியை மறக்க முடியாமல் ஆறுமுகம் ஏக்கத்தில் தவித்தார்.

ஜெயக்கொடிக்கு திட்டமிட்டப்படி கடந்த மாதம் எந்தவித இடையூறும் இல்லாமல் திருமணம் நடந்து முடிந்தது. அவர் திருச்சிக்கு சென்ற பிறகும் கூட ஆறுமுகம் அவர் நினைவாகவே இருந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணிக்கு நன்றாக குளித்து, சாமி கும்பிட்டு, திருநீறு பூசியபடி பக்தி பழமாக ஏரிக்கரை தெருவில் உள்ள தன் வீட்டில் இருந்து ஆறுமுகம் புறப்பட்டார். கையில் பெரிய மண்எண்ணை கேன் வைத்திருந்தார். பொன்பாண்டி வீட்டுக்கு வந்து கதவை தட்டினார்.

ஆதிலட்சுமியம்மாள் கதவைத் திறந்ததும் புயல் வேகத்தில் உள்ளே புகுந்தார். கண் இமைக்கும் நேரத்துக்குள் பொன்பாண்டி, ஆதிலட்சுமி, செந்தில்குமார் மூவர் மீதும் மண்எண்ணையை ஊற்றினார். பிறகு தன் மீதும் மண்எண்ணையை ஊற்றிக் கொண்டார்.

ஜெயக்கொடியை உடனே இங்கு வரச்சொல்லுங்கள். இல்லையெனில் உங்கள் மூவரையும் தீ வைத்து எரித்து விடுவேன் என்று மிரட்டினார். தீப்பெட்டியில் இருந்து தீ குச்சியை எடுத்து உரசவும் முயன்றார்.

பொன்பாண்டியும், அவர் குடும்பத்தினரும் ஆறுமுகத்துடன் கெஞ்சிப் போராடினார்கள். ஆனால் ஆறுமுகம், எதையும் கேட்கவில்லை. ஜெயக்கொடியை ஒரு தடவை பார்த்து விட்டால் போதும், உங்களை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டு போய் விடுவேன் என்பதையே கூறிக் கொண்டிருந்தார்.

கையில் அவர் பெரிய கத்தி ஒன்றும் வைத்திருந்ததால் பொன்பாண்டி குடும்பத்தினர் தப்ப முடியாமல் தவித்தனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு இனி என்ன ஆனாலும் பரவாயில்லை என்று 7 மணியளவில் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர்.

அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பொன்பாண்டி வீட்டை முற்றுகையிட்டனர். ஜன்னலை உடைத்து பார்த்தபோது, 3 பேரை உயிரோடு எரித்து கொல்லப்போவதாக ஆறுமுகம் மிரட்டி கொண்டிருப்பது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் பழவந்தாங்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

7.30 மணிக்கு உதவிக் கமிஷனர் மனோகர சுந்தரதாஸ், இன்ஸ்பெக்டர் கலிய சுந்தரம் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். ஆறுமுகத்திடம் கதவை திற…. ஜெயக்கொடியை அழைத்து வருகிறோம் என்றனர்.

ஆனால் ஆறுமுகம், போலீசாரை பார்த்ததும் கூடுதலாக மிரட்ட ஆரம்பித்தான். போலீஸ்காரர்கள் யாராவது உள்ளே வந்தால் கியாஸ் சிலிண்டரை திறந்து தீ வைத்து இந்த வீட்டையே தரைமட்டமாக்கி விடுவேன் என்றான். சொன்னபடி கியாசையும் திறந்து விட்டான்.

இதையடுத்து பழவந்தாங்கல் போலீசார், தீயணைப்பு படைக்கும், கமாண்டோ படைக்கும் தகவல் கொடுத்தனர். கிண்டி தீயணைப்பு உதவிக் கோட்ட அதிகாரி திருமால் தலைமையில் தீயணைப்பு வீரர்களும், துணைக் கமிஷனர் வரதராஜன் தலைமையில் கமாண்டோ வீரர்களும் விரைந்து வந்தனர். அவர்களது சமரசத்துக்கும் ஆறுமுகம் கட்டுப்படவில்லை.

இதையடுத்து ஆறுமுகத்தை ஏமாற்றிப் பிடிக்க கமாண்டோ வீரர்கள் திட்டமிட்டனர். அதன்படி ஒரு பக்கத்தில் ஆறுமுகத்திடம் போலீசார் பேச்சுக்கொடுத்தப்படி இருந்தனர். மறுபக்கத்தில் கமாண்டோ வீரர்கள் ஜன்னல் கிரீலை கழற்றி வழி ஏற்படுத்தினார்கள்.

இதற்கிடையே தீயணைப்பு படையினர் முன்பக்க கதவில் சிறு ஓட்டை போட்டனர். அந்த சமயத்தில் ஜெயக்கொடியை வர்ணித்து ஆறுமுகம் ஒரு தாளில் கவிதை எழுதிக் கொண்டிருந்தான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய போலீசார் பொன்பாண்டியையும் அவர் குடும்பத்தினரையும் வேறொரு அறைக்குள் சென்று விடுமாறு சைகை காட்டினார்கள்.

உடனே பொன்பாண்டி, ஆதிலட்சுமி, செந்தில்குமார் மூவரும் ஒரு அறைக்குள் ஓடிச்சென்று கதவை பூட்டிக் கொண்டனர். மறுவினாடி தீயணைப்புப் படை வீரர்கள் கடும் வேகத்தில் கதவில் போட்ட ஓட்டை வழியாக தண்ணீரை பீய்ச்சியடித்தனர். இந்த திடீர் தாக்குதலால் ஆறுமுகம் நிலை குலைந்து போனான்.

அந்த நேரத்தில் கமாண்டோ படை வீரர்கள் சசிகுமார், ரமேஷ், நந்தகோ பால், அருண்குமார், முத்து கிருஷ்ணன், பழவந்தாங்கல் போலீஸ் ஏட்டுகள் குருபாதம், மோகன் ஆகிய 7 பேரும் ஜன்னல் வழியாக ஏறி வீட்டுக்குள் குதித்தனர். இதை கண்டு ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் கத்தியால் தாக்கினான். இதில் கமாண்டே வீரர் சசிகுமார் தலையில் கத்திக்குத்து விழுந்தது.

ஆறுமுகத்தை மற்ற போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவன் வைத்திருந்த தீப்பெட்டி, கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு ஆறுமுகத்தை வீட்டுக்கு வெளியில் அழைத்து வந்தனர்.

அவனை பார்க்க நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு திரண்டிருந்தனர். அவர்கள் அவனை திட்டி தீர்த்தனர். வெளியில் அழைத்து வரப்பட்ட ஆறுமுகம் ஜெயக்கொடி பற்றி சொல்லி புலம்பியபடி காணப்பட்டான்.

பிறகு போலீசார் அவனை பழவந்தாங்கல் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போதும் கூட அவன் ஜெயக்கொடி பற்றி எழுதி வைத்திருந்த கவிதைகளை போலீசாரிடம் கொடுத்தான்.

அதில் அவன் உயிரோடு இருக்க விருப்பம் இல்லை. ஜெயக்கொடியை ஒரு தடவை நேரில் பார்த்து விட்டு சாக விரும்புகிறேன் என்று எழுதி இருந்தான். ஒரு சமயத்தில் நல்லா தெளிவாக பேசும் அவன் இடையிடையே மனநலம் பாதிக்கப்பட்டவன் போல நடந்து கொண்டான்.

ஒருதலைக் காதல் அவனை கொலை வெறிவரை கொண்டு வந்து நிற்க வைத்து விட்டது. போலீசார் அவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Source & Thanks ; maalaimalar

Leave a Reply

Your email address will not be published.