தமிழர்களின் வீடுகளில் சிங்களர்கள்-முகாம்களில் இருந்து வெளியேறி நடுத்தெருவில்!

கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் வீடுகளை சிங்களர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பிய சுமார் 1,500 தமிழர்களின் குடும்பங்களின் வீடுகளை சிங்களர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

மேலும் நிலங்களையும் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் தமிழர்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களை நீண்ட நாட்களாக இலங்கை அரசு விடுவிக்கவில்லை. காரணம் கேட்டால், தமிழர் பகுதிகளில் புலிகள் வைத்த கண்ணி வெடிகள் இருப்பதாகவும், இதனால் தமிழர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவற்றை நீக்கிவிட்டே தமிழர்கள் குடியமர்த்த்படுவர் என்றது.

ஆனால், கண்ணி வெடிகள் என்று பூச்சாண்டி காட்டி தமிழர்களை தொடர்ந்து முகாம்களிலேயே முடக்கி வைத்திருந்தற்கான காரணம் இப்போது வெளியில் விட்டது.

முன்பு தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்களர்களை குடியமர்த்த வசதியாகவே இத்தனை நாட்களாக தமிழர்களை முகாம்களில் முடக்கி வைத்துள்ளது.

முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட 1,500 குடும்பங்கள் திரிகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு, புத்தளம் ஆகிய பகுதிகளில் உள்ள தமது வீடுகளுக்கு திரும்பியபோது அவர்களது வீடுகள், நிலங்களை சிங்களர்கள் ஆக்கிரமித்திருந்தனர்.

இத் தகவலை இலங்கை தமிழ் அரசு கட்சி தலைவர் ஆரியநேத்திரனும் உறுதி செய்துள்ளார்.

இந்த பிரச்சனைக்குத் தீர்வு கண்டு, தமிழர் சொத்துக்களை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு அதிபர் ராஜபட்சவுக்கு அவர் கடிதமும் அனுப்பியுள்ளார்.

இதற்கிடேயே 3 லட்சம் பேர் வரை இருந்த முகாம்களில் இப்போது 1.8 லட்சம் தமிழர்கள் தான் உள்ளதாகவும், ஐ.நா, அமெரிக்கா தலையீட்டால் தான் 1.2 லட்சம் பேர் அவரவர் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

தமிழக எம்பிக்கள் குழு தான் காரணம்..கனிமொழி:

இந் நிலையில் தமிழக எம்.பி.க்கள் குழு இலங்கை சென்ற பிறகு தான் இலங்கையில் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

அவர்கள் தங்கள் சொந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து முள்வேலியில் இருந்து தமிழர்களை விடுவிக்க நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அங்கு முழு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்.

அகதிகளுக்கு மத்திய அரசு நிதி தரவில்லை:

இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்,

இலங்கை தமிழ் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களை நேரடியாக பார்த்து குறைகளை தொகுத்து, ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு, ரூ.16 கோடி நிதி உதவி கோரி, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் மத்திய அரசு இதுவரை நிதி தரவில்லை.

பொதுவாகவே, இந்தியாவில் உள்ள அகதிகளுக்கு மத்திய அரசுதான் நிதி ஒதுக்குகிறது என்றார்.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.