ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை வழங்குதல்; இலங்கையுடனான பேச்சுகள் முடிவு: ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு

ஜி.எஸ்.பி.” வரிச்சலுகையை வழங்குவது தொடர்பாக இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த பேச்சுகள் முடிவடைந்துவிட்டன என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேர்னாட் சவேஜ் பிரிட்டனின் “பினான்சியல் டைம்ஸ்” செய்தித்தாளுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

“பேச்சுக்கான காலம் முடிவடைந்து விட்டது. இந்தக் கட்டத்தில் இலங்கை தனக்கு சார்பான பிரசாரங்களை மேற்கொள்வதை விடுத்து விவகாரங்களைக் கையாள்வதற்கு முயலவேண்டும் என நாங்கள் ஆலோசனை வழங்குகிறோம்.

இரண்டு வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம், இலங்கை 2005 ஆம் ஆண்டு “ஜி.எஸ்.பி.” வர்த்தகச் சலுகைக்கு விண்ணப்பித்தவேளை தான் கடைப்பிடிப்பதாக உறுதியளித்த அநேக மனித உரிமைப் பிரகடனங்களைப் பின்பற்றாதமை தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான வர்த்தகச் சலுகையை இடைநிறுத்தும் பட்சத்தில் அந்தச் சலுகையைப் பயன்படுத்தும் 16 நாடுகளில் ஒன்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகவே அமையும். மேலும் இது வர்த்தகத்தை மனித உரிமைகளுடன் தொடர்பு படுத்துவது குறித்த பலத்த சர்ச்சைகளுக்கும் வழிவகுக்கும்.

இலங்கையின் பொருளாதாரத்துக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். “ஜி.எஸ்.பி.” வரிச்சலுகையை இடைநிறுத்தப் போவதாக விடுக்கப்படும் மிரட்டல்களுக்கு அரசியல் நோக்கங்களே காரணம். என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் வெளிநாட்டு நாணய வருமானத்தில் முதன்மை வகிக்கும் ஆடைத்தொழிற்துறையும் தண்டிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

எனினும், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையைத் தான் தண்டிப்பதாகத் தெரிவித்தமையை நிராகரிக்கின்றது. இலங்கை தான் ஏற்றுக்கொண்ட விடயங்களை மீறிவிட்டது. மனித உரிமை மீறல்கள் குறித்துத் தகவல்கள் கிடைத்ததால் அது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டிய கடப்பாடு எமது சட்டங்களின் கீழ் எமக்கு உள்ளது. என்று அவர் தெரிவித்தார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.