உள்ளதும் போச்சு நல்லக்கண்ணு ; ஆந்திராவில் இலவச கண்சிகிச்சை முகாமில் பங்கேற்ற முதியவர்கள் பரிதாபம்

நகரி: ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் இலவச கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்ட 7 பேருக்கு கண் பார்வை பறிபோனது. மேலும் 15 பேர் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். இச்சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்குரு பேட்டாவில் போல்லி நெனி கண் அறக்கட்டளை ஆஸ்பத்திரி கடந்த 18-ந்தேதி இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் நடந்தது. இம்முகாமில் இப்பகுதியை சேர்ந்த முதிவயர்கள் பலர் சிகிச்சைக்காக வந்தனர்.

. அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிலரது கண்களில் இருந்து ரத்தம்- சீல் வடியத் தொடங்கியது. மேலும் அவர்களுக்கு பார்வை மங்கத் தொடங்கியது. இதையடுத்து கண்பார்வை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போல்லி நெனி கண் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.

சென்னையில் அனுமதி : இதனையடுத்து கண் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கும் செலவை ஏற்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்தது. இதன்படி கண் பார்வை பாதித்த காதர் பாஷா, ஈஸ்வரம்மா, கவுசிகா, கொண்டம்மா, சாலம்மா, மும்தாஜ் பேகம், ஜானிக்பாட்ஷா, சுப்பம்மா, மஸ்தானம்மா, கோபால் ரெட்டி ஆகிய 10 பேர் சென்னை நுங்கம்பாக்கம் சங்கர நேத்ராலயா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 10 பேருக்கும் கண்ணில் தொற்று நோய் ஏற்பட்டு இருப்பதால் நோய் உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டதையடுத்து டாக்டர்கள் உடனடியாக 5 பேருக்கு அறுவை சிகிச்சை செய்து 2 கண்களையும் அகற்றினார்கள். மேலும் 5 பேருக்கு இன்று கண்கள் அகற்றப்படுகிறது.

இந்நிலையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட வெங்கம்மா, ஆனந்த், வெங்கய்யா, நாகபூஷனம்மா, ஷேக்நிஷாத், ஷேக்காஜாபீ ஆகிய 6 பேரின் கண்களும் திடீரென பாதிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் உடனடியாக நெல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களது கண்களிலும் நோய் தொற்று இருந்ததால் அவர்களது கண்களையும் அகற்ற டாக்டர்கள் முவு செய்துள்ளனர்.

7 பேருக்கு பார்வை பறிபோனது பற்றி ஆந்திர அரசு டாக்டர்கள் குழுவினர் விசாரணை நடத்தினர். இதில் அறுவை சிகிச்சைக்கு பிறகு பயன்படுத்திய மருந்துகள் அனைத்தும் கெட்டுப்போய் இருந்தது தெரியவந்தது. இலவச கண் அறுவை சிகிச்சை முகாமில் 7 பேரின் கண்பார்வை பறிபோன சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது ஆந்திர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் ஆந்திராவில் ஓங்கி ஒலிக்க துவங்கியுள்ளது.

விசாரிக்க குழு அமைப்பு : கண் பார்வை பறிபோனது தொடர்பாக முழு விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் ராம்கோபால் உத்தரவிட்டுள்ளார்.

Source & Thanks: dinamalar

Leave a Reply

Your email address will not be published.