ஒரு வேளை சோற்றுக்கு திண்டாடுவோர் எண்ணிக்கை 100 கோடி

ரோம் : ஒரு வேளை சோற்றுக்குக் கூட திண்டாடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு முதன் முறையாக இவர்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ளது. வரும் 2015ம் ஆண்டுக்குள் வறுமையை ஒழிக்க பல திட்டங்களை சர்வதேச அளவில் ஐ.நா., அமைப்புகள் , பல நாடுகளும் நிறைவேற்றாவிட்டால், இந்த எண்ணிக்கை இன்னும் அபாயகர நிலையை எட்டி விடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சர்வதேச உணவு தினமாக கடந்த 16ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, சர்வதேச வறுமை நிலை குறித்தும், அதை ஒழிக்க போடப்பட்ட திட்டங்கள் குறித்தும் ஐ.நா., மற்றும் அதை சார்ந்த அமைப்புகள், ஆராய்ச்சி நிபுணர்கள் குழுக்கள் ஆலோசனை நடத்தின. இத்தாலி தலைநகர் ரோமில் செயல்பட்டுவரும் ஐ.நா.,வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவன நிபுணர்கள் வெளியிட்ட அறிக்கையில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகில் பசியால் வாடுவோர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது. கடந்த 1980 மற்றும் 90ம் ஆண்டு களில் நடவடிக்கை எடுக்கப் பட்டாலும், பின்னர் வறுமை நிலை கூடிக் கொண்டே போக பல காரணங்கள் உள்ளன. சமீப ஆண்டுகளில், உலக பொருளாதார நெருக்கடியால் பல விளைவுகள் ஏற்பட்டன. வேலையில்லா திண்டாட்டம், உணவுப்பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால், ஏழை நாடுகளில் வறுமையால் வாடுவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. ஒரு வேளை உணவுக்காக சொத்துக்களை இழக்கும் குடும்பங்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது; பல பொருட்களை விற்பது மட்டுமின்றி, கல்வி உட்பட பல செலவுகளை குறைத்துக்கொள்ளும் நிலையும் நடுத்தர குடும்பங்களுக்கு பழகி வருகிறது. இது ஆபத்தான திருப்பம். இதனால், ஊட்டச்சத்து குறைபாட்டுடன் வாழுவோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.

இந்த ஆண்டில், ஒரு வேளை உணவு கூட இல்லாமல் திண்டாடுவோர் எண்ணிக்கை உலக அளவில் கடந்த 40 ஆண்டுகளில் முதன் முறையாக 100 கோடியை எட்டி விட்டது. 2015 க்குள் பட்டினியை போக்க போடப்பட்ட திட்டங்களை நிறைவேற்றாவிட்டால், இன்னும் நிலைமை மோசமாகி விடும். பட்டினியை கட்டுப்படுத்தவேண்டும் என்றால், உணவு உற்பத்தியை அதிகப்படுத்தவேண்டும். இதற்காக நாம் விவசாயத்திற்கு முக்கியம் கொடுத்து செயல்படும் போது விளைவுகள் எதிர் மறையாக இருக்கின்றன.

கடந்த 1980ம் ஆண்டில் ஏழை நாடுகளுக்கு விவசாயத்திற்கு, பல நாடுகளிலிருந்து கிடைத்த பொருளாதார உதவிகள் 17 சதவீதமாக இருந்தது. ஆனால், 2006ம் வருடத்தில் இது 3.8 சதவீதமாக குறைந்து விட்டது. இதனால், விவசாய உற்பத்தியில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. கடந்த மூன்று வருடங்களாக இந்த உதவிகள் சற்று அதிகரித்து வருகிறது. ஆப்ரிக்காவில் உள்ள 20 நாடுகள் உட்பட உலகில் 30 நாடுகளுக்கு பட்டினியை போக்க உடனடி உணவு தேவை உள்ளது. ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் தான் அதிகமானோர் பசியால் வாடுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.