முகாம் தமிழர்கள் – ராணுவம் மோதல்: தமிழர் பலி

வவுனியா: இடம் பெயர்ந்தோர் முகாமில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நேற்று மோதல் வெடித்தது. அதில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வவுனியா பூந்தோட்டத்தில், கல்வியல் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள முகாமில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

கொல்லப்பட்டவர் கிளிநொச்சி கனகபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஆவார்.

முன்னதாக முகாமில் இருந்த நபர் ஒருவரைக் கடத்திச் சென்று படையினர் சுட்டுக்கொன்றதாகக் குற்றம்சாட்டியே மக்கள் படையினருக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினர் எனத் தகவல்கள் கூறுகின்றன.

படையினரின் நடவடிக்கைகளுக்கு முகாம் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து அங்கு பிரச்சினை ஏற்பட்டது. இதனை அடுத்து இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆதரவாக அந்தப்பகுதியில் இருந்த தமிழ் மக்களும் படையினருக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து மோசமான நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் விரக்தி அடைந்திருக்கும் மக்களுக்கும் படையினருக்கும் இடையில் மோதல்கள் உருவாகும் ஆபத்து இருப்பதாக மனித உரிமை அமைப்புக்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தன.

அத்தகைய நிலையில் பூந்தோட்டம் முகாமில் மக்களுக்கும் படையினருக்கும் இடையில் நேற்று மோதல் ஏற்பட்டது.

மக்களின் எதிர்ப்பை அடக்குவதற்காக படையினர் அவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கினர். இந்தச் சம்பவத்தின் போது துப்பாக்கிப் பிரயோகமும் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது. ஆனால் அது தொடர்பான தெளிவான விபரத்தை காவல்துறைப் பேச்சாளர் தெரிவிக்கவில்லை.

முகாமில் இருந்த நபர் ஒருவர் அங்கிருந்து வெளியே தப்பிச் சென்றுவிட்டு திரும்பவும் ரகசிய வழி மூலமாக முகாமிற்குள் நுழைய முயற்சித்த சமயம் படையினரிடம் அகப்பட்டுக்கொண்ட சம்பவத்தை அடுத்தே அங்கே பிரச்சினைகள் ஏற்பட்டதாக காவல்துறைப் பேச்சாளர் நிமால் மிடிவகே தெரிவித்தார்.

மீண்டும் முகாமுக்குள் நுழைய முயற்சித்த அந்த நபரைப் படையினர் கைது செய்ய முயற்சித்தபோது அவர் தப்பிச் செல்ல முயற்சித்தார் எனத் தெரிவித்த பேச்சாளர், அதுவே அங்கு நிகழ்ந்த சம்பவத்திற்கு வழிகோலியது. உடனடியாக அவரைப் படையினர் வவுனியா மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள் என்றார்.

ஆனால், ராணுவம் அந்த நபரை கடத்திக் கொன்று விட்டதாக தமிழ் மக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை ராணுவத்தினர் அழைத்து வந்து காட்டியதைத் தொடர்ந்து பிரச்சினை ஓய்ந்தது.

இந்தச் சம்பவத்தை அடுத்து வவுனியா நகரில் இருந்து பூந்தோட்டம் நோக்கிச் செல்லும் பாதைகள் உடனடியாகப் படையினரால் மூடப்பட்டன. செய்தியாளர்கள் செல்வதும் தடுக்கப்பட்டது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.