மதுரை மேலூர் அருகே கோயிலுக்குள் அம்மனாக குடிபுகுந்த சிறுமிகள்

posted in: தமிழ்நாடு | 0

மேலூர் அருகே ஏழை காத்த அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று நடந்த நிகழ்ச்சியில் அம்மன் அலங்காரத்தில் இருந்த 73 சிறுமிகளில் 7 பேரை தேர்வு செய்து பூசாரி கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.


மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர், அம்பலக்காரன்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி, மலம்பட்டி ஆகிய 5 கிராமங்களும் சேர்ந்து Ôவெள்ளலூர் நாடுÕ என அழைக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள ஏழை காத்த அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடக்கும் திருவிழா பிரசித்தி பெற்றது.

பண்டைக்காலத்தில் வெள்ளலூர் நாட்டில் சகோதரிகள் 2 பேர் வசித்து வந்தனர். இருவருக்கும் திருமணம் நடந்தது. மூத்த சகோதரிக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இளைய சகோதரிக்கு அடுத்தடுத்து 7 குழந்தைகள் பிறந்தன. தங்கையின் குழந்தைகள் மீது அதிக பாசம் வைத்திருந்த மூத்த சகோதரி, அவர்களை தனது குழந்தைகளாக நினைத்து வளர்த்தாள். குழந்தைகள் தன் மீதும் பாசம் செலுத்தாமல் சகோதரி மீது செலுத்திவிடுவார்களோ என்று இளைய சகோதரி கலக்கமடைந்தாள்.

குழந்தைகளை கூடைக்குள் மறைத்து வைத்துவிட்டாள். மூத்த சகோதரி வந்து கேட்டபோது, குழந்தைகள் வெளியே சென்றுவிட்டதாக பொய் சொன்னாள். குழந்தைகள் கூடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை உணர்ந்த மூத்த சகோதரி கண்ணீருடன் அங்கிருந்து சென்றுவிட்டார். அவர் சென்ற பிறகு கூடையை திறந்துபார்த்த இளைய சகோதரி 7 குழந்தைகளும் கல்லாக மாறி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள். அழுது புலம்பிய இளைய சகோதரி, ஏழை காத்த அம்மனை வேண்டியதும் குழந்தைகள் உயிர் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்தக் கதையை மையமாக வைத்தே புரட்டாசி மாதத் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழா, இன்று காலை தொடங்கியது. மேலூர் பகுதியில் உள்ள சுமார் 50 கிராமங்களைச் சேர்ந்த 73 பெண் குழந்தைகள் அம்மன் கோலத்தில் கோயில் முன் கூடினர். அவர்களில் 7 பேரை மட்டும் கோயில் பூசாரி சின்னத்தம்பி தேர்வு செய்து கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். இவர்கள் 7 பேரும் 15 நாட்கள் கோயிலிலேயே தங்கியிருக்க வேண்டும். திருவிழா முடியும் வரை இப்பகுதியில் உள்ள 50 கிராமங்களுக்கும் இவர்கள் வீதி உலா செல்வார்கள். அப்போது கிராம மக்கள் இவர்களை அம்மனாக நினைத்து வழிபடுவார்கள்.

விழாவை முன்னிட்டு வரும் 29-ம் தேதி வைக்கோல் பிரி திருவிழா நடக்கும். அன்று 5 ஆயிரம் பெண்கள் மதுக்கலயம் சுமந்து ஊர்வலமாக செல்வார்கள். மறுநாள் தேரோட்டம் நடக்கிறது.

Source & Thanks : newindianews

Leave a Reply

Your email address will not be published.