மீனவர்கள் பிரச்னையில் முதல்வரின் மனநிலை மாறவேண்டும்: விஜயகாந்த்

தமிழக மீனவர்கள் பிரச்னையில் முதல்வர் கருணாநிதியின் மனநிலை மாற வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார்.
தே.மு.தி.க.வின் 5-ம் ஆண்டு துவக்கவிழா சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் ஏற்கெனவே அறிவித்தபடி, தனது பிறந்த நாளில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு ரூ.10,000-க்கான எல்.ஐ.சி. பத்திரத்தை முதல் கட்டமாக 85 பேருக்கு வழங்கினார்.

பத்திரத்தை வழங்கிய விஜயகாந்த் “அதை 20 ஆண்டுகள் வரை பத்திரமா வெச்சுக்கோங்க’ என்று குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

பெண் சிசு படுகொலை, வரதட்சணைக் கொடுமை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்பதற்காக 2006-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தலின் போது எங்களுடைய தேர்தல் அறிக்கையில் இத்திட்டத்தை அறிவித்திருந்தேன்.

ஆனால் இது போன்ற நல்ல திட்டங்களைச் செயல்படுத்த ஆளும் கட்சியினர் முன்வரவில்லை. எனவேதான் இத்திட்டத்தை நானே செயல்படுத்தியுள்ளேன். நான் வழங்கியுள்ள இந்தப் பத்திரம் எல்.ஐ.சி.யின் “மார்க்கெட் பிளஸ்’ பத்திரமாகும். இப்பெண் குழந்தைகளுக்கு திருமணத்தின் போது குறைந்தது ரூ.1.5 லட்சம் வரை கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மதுரை திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு நானே நேரில் சென்று குழந்தைகளுக்கு வழங்க உள்ளேன்.

2011-ல் நிச்சயம் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்பதில் நம்பிக்கை உள்ளது. தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. எனவே அதற்குள் கூட்டணி குறித்து இப்போதே எதுவும் கூறமுடியாது. நிழலுக்கு மாலை போட விரும்பவில்லை.

இன்றைய சூழ்நிலையில் தேசிய அளவில் நதிகளை இணைப்பது என்பது அவசியமான ஒன்று. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. ஆனால் இங்கு வந்த அவர் தமிழக பிரச்னை குறித்து என்ன பேசினார்?

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். 24 நாள் போராட்டத்துக்குப் பிறகு தமிழக மீனவர்கள் கடலுக்குத் திரும்பினர். ஆனால் கடலுக்கு திரும்பிய அன்றே அவர்களை சிங்கள ராணுவத்தினர் தாக்கியுள்ளனர். இலங்கைத் தமிழர் மற்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி தனது மன நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். அல்லது கருணாநிதியே மாற வேண்டும் என்றார் விஜயகாந்த்.

Source & Thanks : newindianews.

Leave a Reply

Your email address will not be published.