அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது;வரலாறு தான் பிரபாகரனை உருவாக்கியது: ஜே.வி.பி.

யுத்தத்திற்கு எந்தவிதத்திலும் தொடர்புபடாத அப்பாவி மக்களை இடைத்தங்கல் முகாம்களில் சிறை வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது. அவர்களை நடைமுறை வாழ்க்கைக்குள் உள்ளீர்க்க வேண்டும் என்றும், வரலாறு தான் பிரபாகரனை உருவாக்கியது என்றும் ஜே.வி.பி. தெவித்துள்ளது.

இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அண்மையில் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினரும் குழுத் தலைவருமான அநுர திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெவித்த அநுர திசாநாயக்க எம்.பி.,

இன்று மூன்று இலட்சம் மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களால் தாம் விரும்பும் இடத்திற்குச் செல்ல முடியாது. சுதந்திரமாக நடமாட முடியாது.

இம்மக்கள் தாம் தொடர்புபடாத யுத்தத்திற்காக இன்று தண்டனை அனுபவிக்கின்றனர். இம் முகாம்களில் பெற்றோரை இழந்த உறவினர்கள், ஆதரவில்லாத 850 சிறுவர், சிறுமியர் உள்ளனர். கோர யுத்தத்தால் இப்பிள்ளைகள் அநாதைகளாகியுள்ளன.

அத்துடன் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நியூமோனியாவால் பலர் உயிரிழந்துள்ளனர். 200 பேருக்கு ஒரேயொரு மலசலகூடம் தான் உள்ளது.

70,000 சிறுவர், சிறுமியர் முகாம்களில் உள்ளனர். அப்பிள்ளைகள் சுதந்திரமாக ஓடித் திரியவோ விளையாடவோ முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

மழை காலங்களில் வெள்ளம் நிரம்பி மக்கள் வாழ முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.எனவே இம்மக்களை வாழ வைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு இம் மக்கள் ஒடுக்கப்படுவார்களானால் மீண்டும் பயங்கரவாதம், பிரிவினைவாதம் தலைதூக்கும்.

நடந்து முடிந்த யுத்தம் பிரபாகரனின் உருவாக்கம் அல்ல. வரலாற்றை பிரபாகரன் நிர்மாணிக்கவில்லை, வரலாறு தான் பிரபாகரனை உருவாக்கியது என்றும் ஜே.வி.பி. சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அதிகாரப் பரவலாக்கல் தீர்வாகாது. அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வை வழங்க வேண்டும்.

அதிகாரத்தை பரவலாக்குவதால் மக்களுக்கு நன்மைகள் கிடைக்கப் போவதில்லை. மாறாக ஒரு சில தமிழ் அரசாங்க சார்பானவர்களே நன்மையடைவார்களென்றும் அநுர திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.