துபாய் மாப்பிள்ளை வர முடியவில்லை மணமகளுக்கு மாலையிட்டார் சகோதரி

திருவனந்தபுரம் : திருமணத்திற்கு துபாயில் இருந்து மணமகன் வராததால், வேறு வழியின்றி, மணமகளுக்கு, மணமகனின் சகோதரி மாலையிட்டார். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஆலப்புழா மாவட்டம் தெக்கேக்கரா சூரல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன்; இவரது மகன் பிரின்ஸ் மோன்; துபாயில் வேலை செய்கிறார். இவருக்கும், ராஜன் என்பவரது மகள் ரம்யாவுக்கும், ஆகஸ்ட் 31ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமணத்திற்கான அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு, உறவினர்கள், நண்பர்களுக்கு வினியோகிக்கப்பட்டது. திருமணத்திற்கு சில தினங்கள் முன்பாகவே கேரளாவுக்கு வந்து விடுவதாக மணமகன், பெற்றோரிடம் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் துபாயில் கார் விபத்தில் சிக்கியதால், அவரை நாடு திரும்ப துபாய் போலீசார் அனுமதிக்கவில்லை. விபத்து வழக்கு முடியும் வரை நாடு திரும்ப அனுமதி வழங்க அவர்கள் மறுத்து விட்டனர். திருமணத்திற்கு முதல் நாள், தன்னால் திருமணத்திற்கு வர இயலாமையை மணமகன் அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்; இரு வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். இருந்தபோதிலும், நிச்சயிக்கப்பட்ட நாளிலேயே திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்தனர்.

திருமண நாளன்று முகூர்த்த நேரத்தில் மணமகள் கழுத்தில் மணமகன் சார்பில் அவரது தாயின் சகோதரி மகள் தன்யா, மாலை அணிவித்தார். மேலும் மலர் செண்டும் கொடுத்தார். இதையடுத்து மணமகனின் பெற்றோர், அவரை தங்கள் வீட்டின் மருமகளாக ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து விருந்துபசாரங்கள் நடந்தன. அடுத்த சில தினங்களில் மணமகன் துபாயில் இருந்து வந்த பிறகு, சுப தினத்தில் மணமகள் கழுத்தில் அவர் தாலி கட்டி முறைப்படி மனைவியாக்கிக் கொள்வார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.