ஹார்பூன் ஏவுகணையில் பாக்., சதி? ஆய்வு செய்ய அமெரிக்கா தயார்

வாஷிங்டன்:“ஹார்பூன் ஏவுகணை குறித்து எழுந்துள்ள சந்தேகத்தை போக்கும் வகையில், ஏவுகணை தொழில் நுட்பத்தை ஆய்வு செய்வதற்கு பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது’ என, அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க பொது விவகாரத்துறை இணை அமைச்சர் கிரவுலி கூறியதாவது:


அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய, “ஹார்பூன்’ வகை ஏவுகணைகளின் தொழில் நுட்பத்தில் பாகிஸ்தான் மாற்றம் செய்துள்ளதாகவும், அவற்றை இந்தியாவை தாக்கும் வகையில் நிறுத்தி வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியது.இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.மிகவும் கவலை அளிக்கும் விஷயம்.இதை அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருகிறது.

அமெரிக்காவை பொறுத்தவரை, எந்த நாட்டுக்காவது ஆயுதங்களை விற்பனை செய்தால், அதன் பயன்பாடு குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் பரஸ்பரம் ஆய்வு செய்வதற்கு வகை செய்யும் வகையில் ஒப்பந்தம் செய்வது வழக்கம். ஹார்பூன் ஏவு கணை விஷயத்திலும் பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.தற்போது ஹார்பூன் ஏவுகணையில் மாற்றம் செய்திருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, எங்களின் கவலையை பாகிஸ்தானுக்கு தெரிவித்தோம். இதற்கு, பாகிஸ்தான் தரப்பில் சாதகமான பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவுகணை தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து அமெரிக்கா – பாகிஸ்தான் அதிகாரிகள் இணைந்து ஆய்வு செய்வதற்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது. விரைவில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு கிரவுலி கூறினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.