தமிழர் முகாம்கள் குறித்த ஐ.நா. அறிக்கையை இருட்டடிப்பு செய்யும் பான் கீ மூன், விஜய் நம்பியார்: ஜெகத் கஸ்பார் குற்றச்சாட்டு

இலங்கையில் பருவமழை தொடங்குவதற்கு முன் முகாம் மக்களை அங்கிருந்து வெளியேற்றாவிடில், 3.5 லட்சம் தமிழர்கள் பாதிக்கப்படுவர் என்ற ஐ.நா.வின் அறிக்கையை, பான் கீ மூனும், விஜய் நம்பியாரும் மறைத்து இருட்டடிப்பு செய்து வருவதாக நாம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் ஜெகத் கஸ்பார் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கஸ்பார் கூறுகையில்,

இலங்கையில் பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே முகாம்களில் சிறைப்பட்டுள்ள தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் 3.5 லட்சம் தமிழர்கள் பாதிக்கப்படுவர் என்ற ஐ.நா.வின் அறிக்கையை, ராஜபக்சேவின் தூதர்கள் போல செயல்படும் பான் கி மூனும், விஜய் நம்பியாரும் மறைத்து இருட்டடிப்பு செய்து வருவதாக நாம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் ஜெகத் கஸ்பார் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் செப்டம்பர் மாத இறுதியில் மழைக்காலம் தொடங்கி விடும். அதற்கு முன்பாக அங்கு மழைக் காலத்தை தாங்கும் கட்டுமான வசதிகளோ, மருத்துவ ஏற்பாடுகளோ இல்லாத முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் 3.5 லட்சம் ஈழத்தமிழர்கள் விடுவிக்கப்பட்டாக வேண்டும்.

இல்லாவிட்டால் மழைக்காலத்தில் அந்த முகாம்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறப்பார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மறைக்கும் பான் கீ மூன், விஜய் நம்பியார்…

இலங்கை  ஜனாதிபதி ராஜபக்சவின் தூதுவர்கள் போல செயல்படும் ஐ.நா. பொதுச்செயலர் பான்-கீ-மூன், அவரது செயலர் விஜய் நம்பியார் ஆகியோர் அந்த அறிக்கையை இருட்டடிப்பு செய்து வருவதாக செய்திகள் கிடைத்துள்ளன.

எனவே, மழைக்காலம் தொடங்கும் முன்பு முகாம்களில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி அனைத்து அரசியல் கட்சியினருடன் சென்று வலியுறுத்த வேண்டும்.

இந்த பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகள், தலைவர்கள், தமிழ் அமைப்புகள் ஒரு கருத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று “நாம் அமைப்பு” கேட்டுக்கொள்கிறது. ஏற்கனவே இதுகுறித்து பிரதமருக்கு அக்கறையுடன் கடிதம் எழுதிய முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

நிராயுதபாணிகளான தமிழ் இளைஞர்கள் நிர்வாணமாக்கப்பட்டு கைகளும், கால்களும் கட்டப்பட்ட நிலையில் இலங்கை இராணுவத்தினரால் தலையில் சுட்டுக் கொல்லப்படும் வீடியோ பட ஆவணங்கள் உண்மையானவைதான் என்று தெரியவந்துள்ளது.

இலங்கையில் இருதரப்பினர் மீதான யுத்த குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் இந்திய வெளியுறவு கொள்கையை உருவாக்குவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

இலங்கையில் திறந்தவெளி முகாம்களின் நிலையை நேரில் கண்டு வருவதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை மத்திய அரசு அனுப்ப வேண்டும் என்று “நாம் அமைப்பு” சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்றார் கஸ்பார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.