ஹெல்மெட் அணியாததால் அபராதம்: அரசுக்கு கிடைத்ததோ ரூ.10 கோடி

கொச்சி: இரு சக்கர வாகனம் ஓட்டும்போது தலை கவசம் (ஹெல்மெட்) அணியாமல் சென்றதால் அபராதமாக, 10 கோடியே 63 லட்ச ரூபாய் அரசுக்கு கிடைத்துள்ளது என மாநில அரசு, கேரள ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் தலை கவசம் அணியவேண்டும் என அரசுக்கு கேரள ஐகோர்ட் முழு பெஞ்சு நேற்று முன்தினம் மீண்டும் உத்தரவிட்டது. தலை கவசம் அணிந்து தான் இரு சக்கர வாகனங்களில் செல்கிறார்களா என்பதை போலீஸ் டி.ஜி.பி., கண்காணித்து கோர்ட்டில் தெரிவிக்கவேண்டும் என்றும் கோர்ட் உத்தரவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், கேரள ஐகோர்ட்டில் அரசு அளித்த வாக்குமூலத்தில், ”

சாலையில் செல்லும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தலை கவசம் அணியாமல் சென்றபோது அவர்களிடம் இருந்து வசூலித்த தொகை, 10 கோடியே 63 லட்ச ரூபாய். இது கேரள போலீசாரும், போக்குவரத்து அதிகாரிகளும் சேர்ந்து 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து 2009ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரையில் வசூலிக்கப்பட்ட அபராத தொகையின் கணக்கு. தலை கவசம் அணியாமல் செல்பவர்களை போலீசார் தடுத்தும், நிற்காமல் சென்றவர்கள் மீது சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவ்வாறு தலை கவசம் அணியாமல் சென்று, போலீசாரிடம் சிக்கியவர்கள் எண்ணிக்கை, திருவனந்தபுரத்தில் தான் அதிகம். அங்கு ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 430 பேர் சிக்கினர். கொச்சியில் 88 ஆயிரத்து 319 பேரும், கோழிக்கோடு நகரில் 71 ஆயிரத்து 624 பேரும், புறநகரில் 30 ஆயிரத்து 867 பேரும் சிக்கினர். மொத்தத்தில் தலை கவசம் அணியாமல் செல்பவர்களை அதிகளவு வேட்டையாடி வருவது போலீசார் தான். மாநிலத்தில் இதுவரை 10 லட்சத்து 53 ஆயிரத்து 881 பேர் சிக்கி உள்ளனர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.