பன்றிக்காய்ச்சல் : மாநில அரசுகள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை : குலாம் நபி ஆசாத்

புதுடில்லி : பன்றிக்காய்சல் பறவாமல் தடுக்க மத்திய அரசுதான் எல்லா நடவடிக்கையையும் எடுத்தது என்றும் மாநில அரசுகள் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவைகளின் கடமையில் இருந்து தவறி விட்டன என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டினார்.

இந்த விஷயத்தில் மத்திய அரசு, அதன் அதிகபட்ச வரம்பு வரை வந்து நடவடிக்கை எடுத்தது. அதற்கு மேல் மாநில அரசுகள் தான் செய்ய வேண்டும் என்றார் அவர். புதுடில்லியில் இன்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். நோய் இருப்பதை கண்டுபிடித்தது, அதற்கான மருந்தை கொடுத்தது, தடுப்பு ஊசி தயாரிக்க ஏற்பாடு செய்தது, டாக்டர்களுக்கு பயிற்சி அளித்தல் போன்ற எல்லாவற்றையும் மத்திய அரசே செய்தது. மாநில அரசுகளோ அதன் கடமையில் இருந்து விலகி விட்டது என்றார் அவர். இந்த விஷயத்தில் மத்திய அரசு அதிகாரிகள் கடுமையாக உழைத்து வரும்போது, மாநில அரசு அதிகாரிகள் குறைந்த பட்சம் இரவு 10 மணி வரை வேலைபார்த்து அதற்கான ரிப்போர்ட்டையாவது தயார் செய்து அனுப்பலாம் என்றார். இந்த குற்றச்சாட்டை அவர் செல்லி முடித்ததும் குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வியாஸ் எழுந்து, மத்திய அமைச்சர் ஒருவர் இம்மாதிரியெல்லாம் மாநில அரசுகளை குற்றம் சாட்டி பேசியிருக்க கூடாது என்றார். அதற்கு பதிலளித்த ஆசாத், நான் எல்லா மாநிலங்களையும் சொல்லவில்லை; சில மாநிலங்கள் நல்லமுறையில் நடவடிக்கை எடுத்திருக்கின்றன. பன்றிக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிக்க கூடுதல் ஆஸ்பத்திரிகளை தயார் செய்யுமாறும் கூடுதல் டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்குமாறும் சொல்லி முன்கூட்டியே கடிதம் எழுதினோம். அதற்கு மாநில அரசுகளிடமிருந்து எந்தவித பதிலும் இல்லை. எனவே கேபினட் செகரட்டரியையும், மற்றும் அமைச்சகத்தில் உள்ள செகரட்டரிகளையும் மாநிலங்களுக்கு அனுப்பி முதல்வர்களை சந்தித்து பேச சொன்னேன். அதன்பின்னரும் நான் முதல்வர்களை தொலைபேசியில் கூப்பிட்டு பேசவேண்டியதாக விட்டது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.