பாட்னாவில் ஏ.சி. பெட்டியில் ஏறியவர்களுக்கு அடி: ரயிலுக்கு தீவைப்பு

ஏ.சி. பெட்டியில் உட்கார்ந்திருந்தவர்களை விரட்டிவிட்டு இருக்கைகளை ஆக்கிரமித்த மாணவர்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் அடித்து உதைத்தனர். இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் ரயிலுக்கு தீ வைத்தனர். இதில் 6 பெட்டிகள் எரிந்து நாசமானது.


டெல்லியில் இருந்து ராஜ்கீர் நகருக்கு செல்லும் ஷரம்ஜீவி எக்ஸ்பிரஸ் ரயில் பீகார் மாநிலம் அரா ரயில் நிலையத்துக்கு நேற்று காலை வந்தது. அப்போது, சாதாரண டிக்கெட் கூட வாங்காத 15 மாணவர்கள் ஏ.சி. பெட்டியில் ஏறினர்.

அங்கு உட்கார்ந்திருந்தவர்களை எழுப்பிவிட்டு அந்த இருக்கைகளில் அவர்கள் உட்கார்ந்தனர். இதற்கிடையே ரயில் புறப்பட்டுவிட்டது. அடுத்த ரயில் நிலையமான பிகாடாவில் ரயில் நின்றதும் ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் பயணிகள் புகார் செய்தனர். ரயில்வே பாதுகாப்பு படையினர் கேட்டுக் கொண்ட போதும் இடத்தைவிட்டுத் தர மாணவர்கள் மறுத்துவிட்டனர். இதனால், அவர்களை அடித்து உதைத்து வெளியேற்றினர். அதில், சந்தோஷ் என்ற மாணவன் உட்பட 3 பேரை காவல் நிலையத்துக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் இழுத்துச் சென்றனர்.

இதை பார்த்ததும் மற்ற பெட்டிகளில் இருந்த அவர்களது நண்பர்கள் ஆத்திரமடைந்தனர். இதற்கிடையே, போலீஸ் தாக்கியதில் சந்தோஷ் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. இதனால், ஷரம்ஜீவி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. பெட்டிகளை மாணவர்கள் அடித்து நொறுக்கத் தொடங்கினர்.

அந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் தங்கள் உடைமைகளுடன் ரயிலில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். பின்னர், ரயிலுக்கு மாணவர்கள் தீ வைத்தனர். இதில், 4 ஏ.சி. பெட்டிகள் உட்பட 5 பெட்டிகள் சேதம் அடைந்தன. பக்கத்து தண்டவாளத்தில் நின்றிருந்த சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. பெட்டி ஒன்றும் சேதம் அடைந்தது. இதனால், பாட்னா-மொகல்சராய் இடையே ரயில் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.

Source & Thanks : newindianews

Leave a Reply

Your email address will not be published.