வெள்ள பாதி்ப்பு: ஐ.நா. தான் காரணம்-கூறுகிறது இலங்கை

வன்னி: பெரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கித் தவித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம் அளிக்காமல் ஐ.நா. சபையயை குற்றம் சாட்டியும், வேறு விதமாக திசை திருப்பியும் கொண்டிருக்கிறது இலங்கை அரசு.

இலங்கை முகாம்களில் வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை மிக மோசமடைந்துள்ளது. சமீபத்தில் பெய்த கடும் மழையால் அனைத்து முகாம்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது. லட்சக்கணக்கான மக்கள் நிற்கக் கூட இடமின்றி அவதிப்படுகிறார்கள்.

குடிக்க நீர், சமைக்க உணவு அல்லது சமைத்த உணவு, கழிப்பிடம் எதுவுமின்றி மக்கள் படும் அவதி சொல்லத் தரமற்றது என வன்னி முகாம்களை ரகசியமாகப் படம்பிடித்து வந்த ஒருவர் தெரிவித்தார்.

இந்த முகாம்களில் வெளிநபர்களோ, சர்வதேச மீடியாவோ இதுவரை அனுமதிக்கப்பட்டதில்லை. ஆனால் இந்தத் தடைகளையும் மீறி இந்த முகாம்களை ரகசியமாகப் படமெடுத்து ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார்.

இந்த முகாம்களில் உள்ள தற்காலிக டெண்ட்கள், கழிப்பறை (800 பேருக்கு ஒரு கழிப்பறை மட்டுமே!), கழிவுநீர் செல்லும் குழாய் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

கழிப்பறை குழாய்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதால் அந்த கழிவுகள் முழுக்க இந்த கூடாரங்களுக்குள் தேங்கி நிற்பதால், மக்கள் கூடாரங்களுக்குள் ஒதுங்க இடமின்றி மழையில் நனைந்தபடி வெளியிலேயே நிற்கின்றனர்.

ஆனால் இந்த சூழலில் இவர்களுக்கு எந்த உதவியும் வழங்காமல் பட்டினி போட்டு வருகிறது இலங்கை ராணுவம்.

இந்த கொடுமையை மறைக்க, நீர் தேங்கியப் பகுதியில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு முகாம் எல்லைக்குள்ளையே சற்று உயரமான பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், இரு முகாம்களிலும் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் இலங்கை அரசு உண்மைக்கு மாறான தகவல்களை உலகுக்கு வழங்கி வருகிறது.

‘பருவமழையின் துவக்க காலம் இது. மழை தீவிரமடையும்போது, இந்த மக்களின் நிலைமையை நினைத்துப் பார்க்கவும் இயலவில்லை’, என கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார் அந்தப் பகுதியிலிருந்து தப்பி வந்த ஒருவர்.

இப்படி தமிழர்களை மனிதாபிமானமே இல்லாமல், மனிதர்களாகக் கூட மதிக்காமல் நடந்து வரும் இலங்கை அரசு, பாதிக்கப்பட்ட மக்களை வேறு பகுதிகளுக்கு மாற்றவோ, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்டவற்றைத் தரவோ நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.

மாறாக, தமிழர்கள் வெள்ளப் பெருக்கில் சிக்கித் தவிப்பதற்கு ஐ.நா.தான் காரணம் என்று திசை திருப்பும் குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகிறது.

முகாம் பகுதிகளில் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வடிகால் முறைகளை அமைத்ததற்கான பொறுப்பை ஐ.நா. ஏஜென்சிகளே ஏற்க வேண்டும் என இலங்கை கூறியுள்ளது.

மானிக் பார்ம் முகாமில் மழை நீர் வடிகால் அமைப்பை ஏற்படுத்தியது ஐ.நா. ஏஜென்சிகள்தான். வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் அந்த அமைப்புகளே பொறுப்பாக இருந்தன. எனவே இந்த நிலைக்கு இலங்கை அரசைக் குறை கூற முடியாது என்று இயற்கைப் பேரிடர் துறை அமைச்சர் பதியுதீன் கூறியுள்ளார்.

மழை வெள்ளத்தால் ஒரு லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் 400 பேர் வரை மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதாக பதியுதீன் கூறுகிறார்.

புகாருக்கு ஐ.நா. மறுப்பு..

ஆனால் இலங்கையின் இந்தப் புகாரை ஐ.நா. பிரதிநி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதுகுறித்து இலங்கைக்கான ஐ.நா. வசிப்பிடப் பிரதிநிதி நீல் புனே கூறுகையில், முகாம்களில் உள்ள வசதிகளைக் கண்காணித்து பராமரிக்க வேண்டியது அரசின் பொறுப்பே தவிர எங்களுடையதல்ல. அரசின் செயல்பாடுகளுக்கு நாங்கள் உதவிகள், ஒத்துழைப்புகள் வழங்கி வருகிறோம்.

வடிகால் வசதிகளை மேம்படுத்த முயற்சிக்கிறோம். அந்தப் பணி பிரச்சினையின்றி நடந்து வருகிறது என்றார்.

இப்படி மக்களின் துயரத்தைத் துடைக்காமல் பழி போடும் வேலையில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கிறது. இந்த நிலையில், தொடர்ந்து பெய்து வந்த மழையாலும், வெள்ளத்தாலும், வவுனியா அகதி முகாம்களின் நிலைமை மோசமடைந்துள்ளது.

வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை மாவட்டங்களில் 30 முகாம்களில் 2 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 46 ஆயிரம் பேர் வவுனியா பகுதியில் கடுமையான கட்டுக்காவலுடன் கூடிய 14 முகாமகளில் உள்ளனர். 809 ஏக்கர் பரப்பு நிலப்பகுதி 6 வலயங்களாக பிரிக்கப்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மனிதக் கழிவுகள் நீரில் மிதப்பதாக அங்குள்ள மக்கள் மிக மிக வேதனையுடன் கூறுகின்றனர்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.