மாநகராட்சியில் ரூ 55 லட்சம் மோசடி : நெல்லைக்கு புதிய கமிஷனர் நியமனம்

திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சியில் நடந்த 55 லட்சம் ரூபாய் மோசடியை தொடர்ந்து கமிஷனர் மாற்றப்பட்டார்.

அவருக்கு பதிலாக சென்னை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாநகராட்சியில் துணைமுதல்வர் ஸ்டாலின் துவக்கிவைத்த குடிநீர் திட்டத்தில் மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக 300க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒரு இணைப்பிற்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் 55 லட்சம் ரூபாயை பொதுமக்களிடம் பெற்ற அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் அதனை மாநகராட்சிக்கு செலுத்தாதது தெரியவந்தது. இதுதொடர்பாக உதவி கமிஷனர் சாமுவேல் செல்வராஜ், இன்ஜினியர்கள் பைஜூ, கருப்பசாமி உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மோசடி விபரம் முன்பே தெரிந்தும் தி.மு.க.,மேயர் சுப்பிரமணியன், கமிஷனர் மோகன் ஆகியோர் ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் சென்றது. நெல்லை மாநகராட்சியில் ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் ஹர்மந்தர்சிங், சுதீப்ஜெயின் போன்றோர் கமிஷனர்களாக இருந்தபோது நிர்வாகம் சிறப்பாக இருந்தது. ஆனால் ஐ.ஏ.எஸ்.,அல்லாத அதிகாரிகள் மேயரை தாண்டி சுதந்திரமாக நடவடிக்கை எடுக்கமுடியவில்லை என புகார் சென்றது. எனவே ஐ.ஏ.எஸ்.,அதிகாரி ஒருவரை நெல்லை மாநகராட்சியின் கமிஷனராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. தற்போதைய நெல்லை மாநகராட்சி கமிஷனர் மோகன், நகராட்சிகளின் மண்டல நிர்வாக அதிகாரியாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். சென்னை சுனாமி பிரிவில் பணியாற்றும் உயர்அதிகாரி பாஸ்கரன் நெல்லை மாநகராட்சியின் புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அதிகாரி பொறுப்பேற்ற பின்னரே நெல்லை மாநகராட்சியில் பல்வேறு ஊழல்கள் வெளிச்சத்திற்கு வரும் என நெல்லை மக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.