நிச்சயித்த மாப்பிள்ளையை மகள் ஏற்க மறுத்ததால் பெற்றோர் தூக்கில் தற்கொலை

நிச்சயம் முடிந்தும் மாப்பிள்ளையை ஏற்க மகள் மறுத்ததால், மனம் வெறுத்த தம்பதி திருத்தணி லாட்ஜில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.


திருத்தணி பஸ் நிலையம் அருகே சன்னதி தெருவில் தனியார் லாட்ஜ் ஒன்று உள்ளது. இங்கு கடந்த 9ம் தேதி அன்று ஒரு தம்பதி தங்கினர். இரண்டு நாட்களாக அறை திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் உரிமையாளர் முனிரத்தினம் திருத்தணி போலீசில் புகார் செய்தார். டிஎஸ்பி வேணுகோபால், சப்இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பேன் மற்றும் பேன் மாட்டும் கொக்கியில் தம்பதியர் ஒரே புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தனர். உடல்களைக் கைப்பற்றிய போலீசார் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் லாட்ஜ் அறையை சோதனையிட்டதில் செல்போன் ஒன்று இருந்தது. அதில் இருந்த எண்களை தொடர்புகொண்டு பேசியபோது, இறந்தவர்கள் சென்னை அரும்பாக்கத்தில் வசித்த பாலகிருஷ்ணன் (56), மனைவி நிர்மலா (50) என்பதும், இருவரும் திருத்தணி முருகன் கோயிலுக்கு கடந்த 9ம் தேதி வந்ததும், சுவாமி தரிசனம் செய்துவிட்டு லாட்ஜ் அறையில் தங்கியதும் தெரியவந்தது.

பாலகிருஷ்ணனுக்கு ஜோதிலட்சுமி, சித்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர். ஜோதிலட்சுமி திருமணமாகி சென்னையில் வசிக்கிறார். சித்ராவுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது.

ஆனால் சித்ரா அந்த மாப்பிள்ளையை மணக்க மறுத்துள்ளார். மகளை சமாதானப்படுத்த பாலகிருஷ்ணன் எவ்வளவோ முயன்றும், முடியவில்லை. அதனால் மனம் உடைந்த அவர் மனைவியுடன் திருத்தணி கோயிலுக்கு வந்து, அறை எடுத்துத் தங்கி தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்

Source & Thanks : newindianews

Leave a Reply

Your email address will not be published.