சென்னையில் நள்ளிரவில் நிலநடுக்கம்

அந்தமான் அருகே கடலுக்கடியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் சென்னையில் உணரப்பட்டது. இதனால் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் சுனாமி பீதி ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டு பல மணி நேரம் ஆகிவிட்டதால் சுனாமி அபாயம் இல்லை என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


சென்னையில் இருந்து கிழக்கே ஆயிரம் கி.மீ. தூரத்தில் வங்கக்கடலில் அந்தமானுக்கு வடக்கே நேற்று நள்ளிரவு 1.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 என பதிவானது. சென்னையில் தி.நகர், சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, எழும்பூர், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், கொடுங்கையூர், மடிப்பாக்கம், பாலவாக்கம், மயிலாப்பூர் உள்பட பல இடங்களிலும் அதிர்வு உணரப்பட்டது.

இதனால் பீதியடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறினர். கன மழை பெய்ததையும் பொருட்படுத்தாமல் வெளியே நின்றனர். நள்ளிரவு நேரம் என்பதால், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியை உணரவில்லை. நிலநடுக்கம் பற்றி சென்னை நகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் எழும்பூர் தீயணைப்பு தலைமை அலுவகத்துக்கும், நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையத்துக்கும் பொதுமக்கள் போன் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

நிலநடுக்கம் பற்றி ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், “ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அதை பொருட்படுத்தாமல் வீட்டை விட்டு வெளியேறினோம். நிலநடுக்க தகவலை செல்போன் மூலம் எனது நண்பர்கள், உறவினர்களுக்கு தெரிவித்தேன். அவர்களும் நிலநடுக்க அதிர்வுகளை உணர்ந்ததாக தெரிவித்தனர்” என்றார்.

வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையிலும் இந்த அதிர்வு காணப்பட்டது. அங்குள்ள 8 மாடி கட்டிடத்தில் அறுவை சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகள், மற்ற கட்டிடங்களில் உள்ள நோயாளிகள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். கால் கட்டுடன் சிகிச்சை பெற்று வந்தவர்களை உறவினர்கள் தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வந்தது பரிதாபமாக இருந்தது. இதனால் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி ஏற்படலாம் என்ற எச்சரிக்கையால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் மீன்பிடி துறைமுகம், காசிமேடு கரையோரம் உள்ள மீனவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். காலை 6 மணிக்கு பிறகு மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். அதற்கு பிறகும் சுனாமி பீதி காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதனால் மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

நிலநடுக்கம் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் சுனாமி பீதியை ஏற்படுத்தியது. நாகை நம்பியார் நகர் பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் தங்கள் குடிசைகளை காலி செய்துவிட்டு ரிக்ஷாக்களிலும், வண்டிகளிலும் பாதுகாப்பான பகுதிகளுக்குச் சென்றனர். நாகூர் பகுதியில் உள்ள மீனவர்களும் தங்கள் குடிசைகளைவிட்டு வெளியில் வந்துவிட்டனர்.

கன்னியாகுமரி, மணக்குடி, குளச்சல் உள்ளிட்ட இடங்களில் மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வந்து, விடிய விடிய தூங்காமல் தவித்தனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் 24 மணி நேரத்துக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகும், மீன்வளத்துறையும் எச்சரித்துள்ளன. திருச்செந்தூர் கடலில் இன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

கடலுக்கடியில் ஏற்படும் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 9 புள்ளிகளுக்கு மேல் பதிவானால்தான் சுனாமி அபாயம் ஏற்படும். நிலநடுக்கம் ஏற்பட்டு 2 மணி நேரத்துக்குள் ராட்சத அலைகள் எழும். ஆனால் பல மணி நேரம் ஆகியும் கடலில் எந்த மாற்றமும் இல்லை. மேலும், 3 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் சுனாமி ஆபத்து இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Source & Thanks : .newindianews

Leave a Reply

Your email address will not be published.