தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் தப்பிச் செல்கின்றனரா?: பாதுகாப்பை பலப்படுத்த கோத்தபாய அவசர உத்தரவு

வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களுக்காக என அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களில் இருந்து தப்பிய பலர் தென்பகுதிக்கு வந்திருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவல்களைத் தொடர்ந்து முகாம் பகுதியின் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துமாறு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அவசர உத்தரவைப் பிறப்பித்திருக்கின்றது.

இவ்வாறு தப்பிச் சென்றவர்களில் பலர் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் படையினரின் உதவியுடனேயே முகாம்களில் இருந்து தப்பிச் சென்றிருப்பதாகவும் தகவல் கிடைத்திருப்பதையடுத்தே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சோதனைச் சாவடிகளிலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் உத்தரவைத் தொடர்ந்து காவல்துறையினரின் ஆதரவுடன் படையினரும் தப்பிச் சென்றவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

முகாம்களுக்குப் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள படையினர் பெரும் தொகையான பணத்தைப் பெற்றுக்கொண்டு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் தப்பிச் செல்வதற்கு உதவிவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான தகவல்களையடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முகாம்களின் பாதுகாப்பு நிலைமைகளை உறுதிப்படுத்துவதுடன் மேலும் எவரும் தப்பிச் செல்வதைத் தடுக்கும் முகமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதிக் காவல்துறை மா அதிபர் ஒருவரை நியமித்திருக்கின்றார்.

குறிப்பிட்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் வவுனியாவில் இருந்து பணிபுரிவார் எனவும், முகாம்களில் இருந்து எவரும் தப்பிச் செல்ல முடியாதவாறு படையினருடன் இணைந்து சில செயற்திட்டங்களை வகுத்து அவர் செயற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முக்கியமாக வவுனியாவில் இருந்து வெளிச் செல்லும் சோதனைச் சாவடிகளில் சோதனைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

இதேவேளையில் முகாம்களில் இருந்து எத்தனை பேர் தப்பிச் சென்றுள்ளனர் என்பதையிட்டு அறிந்துகொள்வதற்காக முகாம்களில் கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.