இலங்கைக்கான நிதியுதவிக்கு இந்தியா பரிந்துரைக்கலாம்?

இலங்கைக்கு நிதியுதவி வழங்குமாறு “சர்வதேச நாணய நிதியத்திற்கு” இந்தியா பரிந்துரைக்கலாம் என நம்பப்படுகின்றது.

1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியைக் கோரியுள்ள இலங்கை அரசுக்கு அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் மறைமுக எதிரியாகத் திரும்பியிருப்பதால், அந்த நாடுகளை இந்தியா ஊடாகக் கட்டுப்படுத்த இலங்கை அரசு முனைந்து வருகின்றது.

வன்னியில் இறுதிக்கட்டப் போரில் அமெரிக்க விடுத்த போர் நிறுத்த அழைப்பை ஏற்காது, இலங்கை அரசு பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தது என கண்டனம் வெளியிட்டிருந்த அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தற்பொழுது இந்தியாவில் இருக்கின்றார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்தபோது, இலங்கை அரசிற்கான கடனுதவிக்கு அமெரிக்கா இடையூறு விளைவிக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இலங்கையின் போர்க்குற்றம், மற்றும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினரும், திறைசேரிச் செயலருமான பற்றிக் லீஹி, இலங்கைக்கான கடனைத் தடை செய்ய வேண்டும் என செனட் சபையிடம் கேட்டுள்ளார்.

இருப்பினும், அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் உறுதியளித்தால், “சர்வதேச நாணய நிதியம்” இந்த கடனுதவியை வழங்குவதற்கு, அமெரிக்க செனட் சபை அங்கீகாரம் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.