ஆசிரியருக்கு அடி, தொடர்ந்து வாலிபர் சாவில் பதட்டம்: போலீஸ் நிலையம் முற்றுகை

செய்யூர்: அச்சிறுப்பாக்கம் அருகே ஆசிரியரை மாணவன் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த பிரச்னை காரணமாக, மாணவனின் சித்தப்பா மகன் தூக்குப்போட்டு இறந்தார். ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல், போலீஸ் நிலையம் முற்றுகை எனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

அச்சிறுப்பாக்கம் அடுத்த இரும்புலி காலனியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் காத்தமுத்து(17). அச்சிறுப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறான். நேற்றுமுன்தினம் மாலை 4 மணிக்கு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடந்தது. காத்தமுத்து வகுப்பில் கணிதவியல் ஆசிரியர் வெங்கடாஜலபதி பாடம் நடத்தினார். அப்போது காத்தமுத்து பாடங்களை கவனிக்காமல் தலைவாரிக் கொண்டிருந்தான். ஆத்திரமடைந்த ஆசிரியர் அவனை அடித்தார்.

ஆசிரியருக்கு அடி: ஆசிரியரை காத்தமுத்து திருப்பி அடித்தான். அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் வகுப்பை விட்டு வெளியேறினார். சக ஆசிரியர்களிடம் நடந்ததை தெரிவித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் இருதயராஜ் அச்சிறுப்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் சித்ராதேவி பள்ளிக்கு வந்து காத்தமுத்துவைப் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார். காத்தமுத்து போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்ட தகவல் அறிந்து அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். பேச்சுவார்த்தை முடிவில் மாணவன் காத்தமுத்து மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தான். அதை ஏற்றுக் கொண்டு தனது புகார் மீது நடவடிக்கை தேவையில்லை எனத் தலைமை ஆசிரியர் கடிதம் கொடுத்தார். அனைவரும் போலீஸ் நிலையத்திற்கு வெளியே வந்தனர். அப்போது காத்தமுத்துவின் சித்தப்பா மகன் விஜயகுமார்(24) “பள்ளியில் பேசி முடிக்க வேண்டியதை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விட்டீர்களே?’ எனக் கூறி ஆசிரியர் வெங்கடாஜலபதியை அடிக்க பாய்ந்தார். ஊர் பிரமுகர்கள் போலீசாரை சமாதானப்படுத்தி விஜயகுமாரை வீட்டிற்கு அழைத்து சென்றனர். இரவு 11 மணிக்கு விஜயகுமார் வயல் வெளியில் தூக்குப்போட்டு இறந்தார். “விஜயகுமார் சாவுக்கு போலீசார் மற்றும் ஆசிரியர்களே காரணம்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரி அவரது உடலை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுராந்தகம் போலீஸ் டி.எஸ்.பி., பாலசுப்பிரமணியன், ஆர்.டி.ஓ., விஜயகுமார், தாசில்தார் சுரேந்திரன் ஆகியோர் விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். நள்ளிரவு 1 மணிக்கு விஜயகுமார் உடலைப் போலீசார் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமலிருக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போலீஸ் தடியடி: நேற்று காலை பரிசோதனைக்கு பின் விஜயகுமார் உடல் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஊர் மக்கள் பகல் 12.20 மணிக்கு அச்சிறுப்பாக்கம் ரயில் நிலையம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

போலீசார் மீது நடவடிக்கை: பொதுமக்கள் புகாரின்பேரில் அச்சிறுப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்ராதேவி, ஏட்டுகள் குணசேகரன், சந்திரசேகரன் ஆகியோரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் எஸ்.பி., பிரேம்ஆனந்த்சின்கா உத்தரவிட்டார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.