தொடர்கிறது தமிழர்கள் மீதான சித்திரவதை: இயக்குநர் சீமான்

மதுரையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்பொழுது இயக்குநர் சீமான் தனது பேட்டியில் இலங்கையில் தமிழர்கள் மீதான சித்திரவதை இன்னும் தொடர்கிறது என்று கூறியுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பிறகும் தமிழ் மக்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டு உள்ளனர். உணவு, உடை இல்லாமல் நோய்வாய்ப்பட்டு வெட்ட வெளியில் தினமும் ஏராளமானோர் பலியாகி வருகிறார்கள். மனித நேயம் பேசும் உலக நாடுகள் இலங்கை தமிழர்களை காக்க இதுவரை குரல் கொடுக்கவில்லை.

இலங்கையில் போர் முடிந்து ஒரு நிசப்தமான சூழ்நிலை அங்கு ஏற்பட்டு உள்ளது. இலங்கையில் போர் நடந்தபோது கூட போரை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்த வில்லை. இப்போது முள் வேலிக்குள் அடைபட்டு சாகும் தமிழர்களை காக்கவும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போர் முடிந்துவிட்டால் இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாக வாழலாம் என்று ராஜபக்சே கூறியிருந்தார். ஆனால் தற்போது அங்கு என்ன நடக்கிறது? சுமார் 31/2லட்சம் தமிழர்கள் வேலி அமைத்து சுற்றி வளைக்கப்பட்டு உள்ளனர்.

அடுத்த 2 மாதத்தில் சிங்களர்கள் அதிகம் குடியிருக்கும் பகுதிகளுக்கு தமிழர்களை கொண்டு சென்று வேலி அமைத்து அந்த வேலிக்குள் தமிழர்களை கொடுமைப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அங்கு கொடுமைகள் அரங்கேற உள்ளன.

எனவே தமிழர்களுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள வேலிகளை வெட்டி எறிய வேண்டும். இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழ வழி செய்யும் வகையில் தமிழ் உணர்வுள்ள அனைவரும் ஒன்று கூடும்நிகழ்ச்சியாக நாளை (18-ந்தேதி) மாலை 5 மணிக்கு மதுரை ஜான்சி ராணி பூங்கா திடலில் கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதில் தமிழ் உணர்வுள்ள அனைவரும் கலந்து கொண்டு இலங்கையில் வசிக்கும் நம் மக்கள் நிம்மதியாக வாழ குரல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source & Thanks : .newindianews

Leave a Reply

Your email address will not be published.