சிறுசேமிப்பு திட்டத்தில் பண மோசடி: அஞ்சல் துறை ஊழியர்கள் போராட்டம்

சென்னை: அஞ்சல் துறையின் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் (எம். ஐ.எஸ்.,) நடந்த முறைகேட்டில் தொடர்புடைய 24 அஞ்சல் ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக அஞ்சல் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அஞ்சல் துறையில், முதலீட்டாளர்கள் பணம் 18 லட்சம் ரூபாய்க்கு மேல் ஏஜன்ட்கள் ஏமாற்றியது தெரியவந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., மற்றும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக உள்ள ஏஜன்ட்கள் சிலரை தேடி வருகின்றனர். இந்நிலையில், அஞ்சல் துறையின் சென்னை வட்ட புலனாய்வு அதிகாரிகளின் ஆய்வு நடந்தது. அவர்கள் பரிந்துரைப்படி, அஞ்சலக ஊழியர்கள் 24 பேர் மீது இலாகாபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில், சம்பந்தப்பட்ட ஊழியர்களின் கவனக்குறைவு, விதிமீறல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மோசடி செய்யப்பட்ட பணத்தை ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஊழியர்கள் மத்தியில் சிறு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை கண்டித்து இன்று, மத்திய கோட்ட தலைமை அலுவலகமான தி.நகர் தபால் நிலையம் முன் ஊழியர்கள் சார்பில் தர்ணா போராட்டம் நடக்கிறது.

இதுகுறித்து ஊழியர் ஒருவர் கூறுகையில்,””மோசடி செய்த ஏஜன்ட்களை பிடிக்காமல் தற்போது எங்கள் மீது துறை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான சார்ஜ் ஷீட் தரப்படவில்லை. சிறிய முதலீட்டு பணம் தான் போயிருந்தாலும், ஊழியர்களின் நிலுவைத்தொகை மற்றும் போனஸ் ஆகியவற்றை பிடித்தம் செய்ய துறை உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்; இது தவறு. இதை எதிர்த்து தான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்,” என்றார். ஊழியர்களின் போராட்டம் குறித்து சென்னை மத்திய கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் கூறியதாவது: அஞ்சல் துறை விதிகளை மீறியதால் தான் இந்த நடவடிக்கை. 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் “செக்’ தான் தரவேண்டும் என்ற விதி உள்ளது. அதை பலர் மீறியுள்ளனர். இச்சம்பவத்தில் துறை தான் பணத்திற்கு பொறுப்பு. துறை உயர் அதிகாரிகளை கொண்ட புலனாய்வு பிரிவினரின் பரிந்துரையின் பேரில் தான் தற்போது 24 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தில் 10 பேர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். ஏஜன்ட்களின் வார்த்தையை நம்பி ஊழியர்கள் கொடுத்துள்ளனர். விசாரணையில் உண்மை நிலை தெரியவரும். இவ்வாறு வெங்கட்ராமன் கூறினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.