முதலீட்டாளர்களைக் கவர சென்னை அருகே ‘நிதி’ நகரம்: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை அருகே நிதிநகரம் ஒன்று தனியார் பங்கேற்புடன் உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:

”வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதி (மியூச்சுவல் ஃபண்ட்) நிறுவனங்கள், பங்குச் சந்தை வர்த்தகர்கள் ஆகியோரை ஈர்க்கும் வகையில், சென்னை அருகே நிதிநகரம் ஒன்று தனியார் பங்கேற்புடன் உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படும்.

வானூர்தி தயாரிப்பு தொடர்புடைய நடவடிக்கைகளில் தமிழகம் முன்னோடியாக வருவதற்கு ஏற்ப, வானூர்தி பூங்காத் திட்டம் என்ற மாபெரும் திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்துக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளான ஓடுதளம், வானூர்திப் பொருள்களின் உற்பத்தி மற்றும் சோதனை செய்தல், வானூர்தி பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல், விமான பயிற்சிக் கூடங்கள் போன்ற பலவற்றை இந்தத் திட்டம் கொண்டிருக்கும். இது, பொது மற்றும் தனியார் பங்கேற்புடன் செயல்படுத்தப்படும்.

தொழிற்சாலைகள் அதிக எண்ணிக்கையில் அமைந்திருக்கும் பகுதிகளில், தொழிலாளர்களுக்கு நியாயமான விலையில் வீட்டு வசதியைத் தனியார் பங்கேற்புடன் ஏற்படுத்தித்தர பரிசீலனை செய்யும்.

‘சிப்காட்’ தொழிற்பேட்டைக்கு அருகில் அமைந்த பகுதிகளிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் திறமைகளை மேம்படுத்த திருநெல்வேலி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மூன்று பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்.

இந்தப் பயிற்சி மையங்களில், ‘சிப்காட்’ தொழில்பேட்டைக்குத் தங்கள் நிலங்களைக் கொடுத்த குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தமிழகத்தில் அமைந்துள்ள தொழில்களின் போட்டித்திறனை தக்கவைத்துக் கொள்ளவும், மேம்படுத்தவும் ‘தமிழ்நாடு உற்பத்தி போட்டித்திறன் மேம்பாட்டு மன்றம்’ ஏற்படுத்தப்படும்.

இந்தக் குழுவில் தொழில்துறை மற்றும் அரசுப் பிரதிநிதிகள், தொழில்துறை வல்லுநர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தக் குழு தனது அறிக்கையை அவ்வப்போது அரசுக்கு அளிக்கும்” என்றார்.

Source & Thanks : .tamilvanan

Leave a Reply

Your email address will not be published.