நடந்தது போலி எண்கெளண்டர்- தாயை கொன்ற ரவுடியை பழி வாங்கிய ஏட்டு!

சென்னை: கோர்ட்டுக்குக் கொண்டு செல்லும் வழியில் போலீஸ் வேனில் இருந்து குதித்து தப்பி ஓடியபோது ரவுடியை போலீஸ்காரர் சுட்டுக் கொன்றதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு்ள்ளது.

நகைக்காக தனது தாயாரைக் கொன்ற அந்த ரவுடியை போலீஸ்காரர் திட்டமிட்டு பழி வாங்கியது தெரியவந்துள்ளது.

அரக்கோணத்தைச் சேர்ந்த தனசேகர் (24), சீமான்(25) இருவரும் பெண்களை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து வந்தனர்.

திருத்தணி, ஆர்.கே. பேட்டை, அம்மையார் குப்பம், எஸ்.அக்ரஹாரம், கோரமங்கலம் உள்பட பல பகுதிகளில் பெண்களிடம் இவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

இருவர் மீதும் பல கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு ஜாமீனில் வெளியில் வந்த அவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்த தனம்மாள் என்ற பெண்ணை கொலை செய்து நகை பறித்துச் சென்றனர்.

ஆர்.கே.பேட்டை பகுதியில் முனியம்மாள் (65) என்ற மூதாட்டியிடம் இருவரும் நகை பறித்தனர். முனியம்மாள் அலறவே அவரை அடித்து கொலை செய்து விட்டு தப்பினர். முனியம்மாளின் மகன் முருகன் போலீஸ்காரராக உள்ளார்.

இந் நிலையில் கடந்த ஜனவரி மாதம் திருத்தணி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த இந்திராணி (45) என்பவரிடம் தனசேகரும், சீமானும் நகை பறிக்க முயன்றனர். இந்திராணி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தனசேகர், சீமான் இருவரையும் பிடித்து அடித்து உதைத்து திருத்தணி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, இவர்கள் பல பெண்களை கொலை செய்து நகைகளை பறித்தது தெரியவந்தது.

அப்போதுதான் தனது தாயை கொலை செய்து நகைகளை பறித்து சென்றது தனசேகரும், சீமானும் என்று போலீஸ்காரர் முருகனுக்கு தெரிய வந்தது.

தனசேகர், சீமான் இருவர் மீதும் 3 கொலை வழக்குகள், 2 வழிப்பறி வழக்குகள், 2 திருட்டு வழக்குகள் போடப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே போலீஸ்காரர் முருகன் மப்பேடு போலீஸ் நிலையத்துக்கு ஏட்டாக பதவி உயர்வு பெற்று வந்தார்.

புழல் ஜெயிலில் இருந்த தனசேகர், சீமான் உள்பட 6 கைதிகளை வழக்கு விசாரணைக்காக திருத்தணி கோர்ட்டுக்கு அழைத்து செல்ல வேண்டிய பணி மப்பேடு போலீசார் வசம் வந்தது.

இதையடுத்து தனது தாயைக் கொன்ற இந்த இருவரையும் பழி வாங்க திட்டமிட்டார் முருகன்.

கைதிகளை புழல் ஜெயிலில் இருந்து திருத்தணி கோர்ட்டுக்கு நானே அழைத்து செல்கிறேன் என்று முருகன் தாமாகவே முன் வந்து பணி ஒதுக்கீடு கேட்டார். உயர் அதிகாரிகளும் அனுமதி தந்தனர்.

சிறையில் இருந்து கோர்ட்டுக்கு கைதிகளை அழைத்துச் செல்லும்போது ஆயுதப்படை போலீகாரர்கள் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புக்கு வருவர். ஆனால், ஆயுதப்படை போலீஸ் பற்றாக்குறை இருந்ததால் மம்பேடு போலீஸ் ஏட்டு முருகன் துப்பாக்கியுடன் செல்ல அனுமதி கிடைத்தது.

இந் நிலையில் நேற்று காலை 11 மணிக்கு தனசேகர், சீமான், அப்பு, சின்ன கேசவன், முருகன், ராமலிங்கம் ஆகிய 6 கைதிகளை புழல் சிறையில் இருந்து மம்பேடு போலீசார் வேனில் ஏற்றி திருத்தணி கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

கைதிகளுக்கு விலங்கு போடப்பட்டிருந்தது. ஏட்டு முருகன் மற்றும் 3 போலீஸ்காரர்கள் கைதிகளுடன் சென்றனர்.

சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பட்டரந்தாங்கல் என்ற இடத்தில் வேன் சென்று கொண்டிருந்தபோது ஏட்டு முருகன் தனது துப்பாக்கியால் தனசேகர், சீமான் இருவரையும் சுடத் தொடங்கினார்.

இதில் முதல் குண்டு தனசேகர் கழுத்தை துளைத்தது. அடுத்த குண்டு மார்பில் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவன் பிணமானான்.

தனசேகர் அருகில் அமர்ந்திருந்த சீமானுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. அவனை மார்பை நோக்கி ஏட்டு முருகன் சுடுவதற்குள் அருகில் இருந்த மற்ற போலீஸார் அவரை மடக்கிப் பிடித்து தடுத்து விட்டனர்.

தகவல் அறிந்து உயர் அதிகாரிகள் வந்து ஏட்டு முருகனிடம் விசாரணை நடத்தியபோது,

போலீஸ் வேனுக்கு முன்னால் சென்ற பஸ் வேகம் குறைந்ததால், வேனும், மெதுவாக சென்றது. அதை பயன்படுத்தி தனசேகர், சீமான் இருவரும் என்னைத் தாக்கிவிட்டு தப்பியோட முயற்சி செய்தனர். நான் எச்சரித்தும் அவர்கள் பணியாததால் சுட்டன் என்றார்.

ஆனால், மற்ற போலீசார் மற்றும் கைதிகளிடம் விசாரணை நடத்தியபோது யாரும் தப்பி ஓட முயற்சி்க்கவில்லை என்று தெரியவந்தது.

இதையடுத்து முருகனிடம் உயர் அதிகாரிகள் மீண்டும் தீவிர விசாரணை நடத்தியபோது தன் தாயை கொன்றால் பதிலுக்கு இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறினார்.

இதைத் தொடர்ந்து ஏட்டு முருகன் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி என்ற 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனால் கைதி தனசேகர் எண்கெளன்டரில் கொல்லப்படவில்லை. அது போலி எண்கெளவுன்டர் என்று உறுதியாகியுள்ளதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.