ஸ்டிரைக்-தமிழகத்தில் பால் சப்ளை கடும் பாதிப்பு

சென்னை: கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பால் உற்பத்தியாளர்கள் தங்களது காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.

இந்த ஸ்டிரைக்கையடுத்து பால் விநியோகம் தமிழகம் முழுவதும் பாதிப்பை சந்தித்துள்ளது.

கால்நடை தீவன உயர்வு காரணமாக கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை வலியுறுத்தி இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை முதல் ஸ்டிரைக் தொடங்கியது.

சேலம், ஈரோடு, நாமக்கல், குமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் பால் விநியோகத்தை நிறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி அருகே 3 இடங்களில் கறவை மாடுகளுடன் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

பால் உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக் காரணமாக பால் பற்றாக்குறை அபாயம் ஏற்பட்டுள்ளது. ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு ஆவின் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பால் விநியோகம் பாதிப்பு..

ஸ்டிரைக் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பால் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியுள்ளது.

திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பால் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பால் உற்பத்தியாளர்கள் சங்க இணைச் செயலாளர் கணேசன் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் ஸ்டிரைக் முழு வெற்றி அடைந்துள்ளது. அனைத்து பால் கூட்டுறவு சங்கங்களும் மூடப்பட்டு விட்டன என்றார்.

தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது.

இன்று பால் சப்ளையில் பெரிய அளவில் பிரச்சினை வராது என்றாலும் கூட நாளை தமிழகம் முழுவதும் பெருமளவில் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

பேச்சு நடத்த இல.கணேசன் கோரிக்கை:

இதற்கிடையே, பால் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக தலைவர் இல.கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பால் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். பால் உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தி செலவு அபரிமிதமாக உயர்ந்துவிட்ட நிலையில் அவர்கள் தங்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் எனக் கேட்பது நியாயமானது.

ஏற்கனவே உற்பத்தியாளர்களிடமிருந்து அரசு பெறும் பாலுக்கு சராசரியாக 7.50 காசு விலை அதிகம் வைத்தே விற்பனை செய்கிறது. தமிழக அரசு உடனடியாக பால் உற்பத்தியாளர்களுடன் பேச்சு வார்தை நடத்தி வேலைநிறுத்தத்தை தடுக்கவேண்டும்.

கொள்முதல் விலை குறித்து கவலைப்படாத அரசு நுகர்வோர்களுக்கு பால் விலையை உயர்த்துவது குறித்தே திட்டமிடத் துவங்கியிருக்கிறது என்பது கண்டிக்கத்தக்கதாகும் என்று கூறியுள்ளார்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.