ஆசிரியர்கள் அலட்சியத்தால் பிளஸ் 2 தேர்வில் முதலிடத்தை இழந்த மாணவர்

சென்னை: தேர்வு தாள் திருத்திய ஆசிரியர்களின் அலட்சியத்தினால் கிருஷ்ணகிரி மாணவர் 1,184 மதிப்பெண்கள் எடுத்த போதும் மாநில அளவில் முதல் ரேங்க் என்ற பெருமையைப் பெற முடியாமல் போய்விட்டது.

கடந்த மே மாதம் 14ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் திருநெல்வேலி மாவட்டம் பி.ரமேஷ், ஈரோடு லிங்கேஸ்வரன், கிருஷ்ணகிரி கே.சி.சிஞ்சு, கரூர் மாவட்டம் பிரவீன் ஆகிய நான்கு பேர் 1,183 மதிப்பெண்கள் தேர்வு மாநில அளவில் முதலிடம் ரேங்க் பெற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர் எஸ்.பாலமுருகன் 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆங்கிலம் 193, இயற்பியல் 200, வேதியியல் 197, உயிரியல் 199, கணிதம் 200 என அனைத்து பாடங்களிலும் 190 மதிப்பெண்களுக்கு மேல பெற்ற இவர் தாய்மொழியாம் தமிழில் 187 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார்.

இதையடுத்து அவர் தமிழில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தார். அதில் அவருக்கு கூடுதலாக 8 மதிபெண்கள் போடப்பட்டு அவர் தமிழில் 195 மதிப்பெண்கள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது மொத்த மதிப்பெண் 1,184 ஆக அதிகரித்தது. இது மாநில அளவில் முதலிடம் பிடித்த நான்கு மாணவர்களை விட ஒன்று கூடுதலாகும்.

இதையடுத்து 1,184 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் பாலமுருகனுக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என கூறப்பட்டது. ஆனால், அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி இது நடைமுறையில் இல்லை என கூறிவிட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

முதலில் அறிவிக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து தான் மாநில அளவில் அல்லது மாவட்ட அளவில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதுதான் இன்று வரை நடைமுறையில் இருக்கிறது. மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலில் உள்ள மதிப்பெண்கள் ரேங்க் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்படாது.

ஆனால், மருத்துவம், என்ஜினீயரிங் உள்பட அனைத்து படிப்புகளுக்கும் கூடுதல் மதிப்பெண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் வசுந்தராதேவி.

இவரது தேர்வு தாளை திருத்திய ஆசிரியர்களின் அலட்சிய போக்கும் மற்றும் கனவு குறைவின் காரணமாக இந்த மாணவர் தற்போது மாநில அளவில் முதலிடத்தை இழந்துள்ளார்.

மாநில அளவில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்பது தான் ஒவ்வொரு மாணவரின் கனவு. ஆனால், இந்த மாணவரின் கனவு விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களால் சிதைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணியின் மகத்துவத்தை உணர்ந்து தாங்கள் செய்யும் ஒரு சிறு செயல் ஒரு மாணவரின் வாழ்க்கையை மாற்றிவிடும் என்பதை உணர்ந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.

மேலும், மறுக்கூட்டலின் போது 5 அல்லது அதற்கு மேல் கூடுதல் மதிப்பெண் அளிக்கப்படும் தேர்வு தாளை முதலில் திருத்திய ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் இருந்து எழுந்துள்ளது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.